ADDED : நவ 24, 2024 11:01 PM
ஏ.டி.எம்.,கள் எங்கே?
படிப்பறிவு, இல்லாம கூட இருப்பாங்க. ஆனா, நாட்டுல செல்போன், ஆதார் கார்டு, வங்கி கணக்கு இல்லாதவங்க யாரும் இருக்கவே முடியாது.
கோல்டு சிட்டி மைன்ஸ் பகுதிகளிலும் எல்லோருமே வங்கி கணக்கு வெச்சிருக்காங்க. ஆனால் இவங்க பணம் எடுக்க ஏ.டி.எம்., மையங்கள் தான் இல்லை. 3 கி.மீ., துாரம் போய் தான், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க வேண்டி உள்ளது. இந்த வசதியை செய்து தரணும்னு, மக்கள் பிரதிநிதிகளுக்கு அக்கறையே இல்லையே.
உ.பேட்டை, ரா.பேட்டை, ஆ.பேட்டை பகுதிகளில் இருக்கிற வசதி போல, ரயில் நிலையங்களின் அருகிலாவது ஏற்படுத்தலாமே. அடிப்படை தேவைகளில் ஏ.டி.எம்., அவசியம் என்பதை தெரிந்து கொள்ள எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ?
பாழாகும் பூங்கா
கோல்டு சிட்டியில் பல கோடி ரூபாய் செலவிட்டு பூங்காக்கள் ஏற்படுத்தி இருக்காங்க. ஆனா, பராமரிப்பு இல்லாமல் உள்ளது. புதர் வளர்வதற்கும், விஷ ஜந்துக்கள் வசிப்பதற்கும் தான், 'பூங்கா' என பெயர் வைத்து உள்ளனர். இந்த பூங்காக்களை, வனத்துறையினரிடம் ஒப்படைக்கலாமே.
கோல்டு சிட்டி தாலுகாவில் தோட்டக்கலைத் துறை இயங்கவே இல்லை. பல கோடி ரூபாய் செலவழித்து உருவான 50க்கும் மேற்பட்ட பூங்காக்கள் பாழாக்கப்பட்டு உள்ளன. இவைகளை சீர்படுத்த இன்னும் எத்தனை லட்சம் எதிர்பார்க்குறாங்க.
பூங்காக்களா பெயர் பலகைகள் அழிந்து, பல ஆண்டுகள் ஆகின்றன. அந்த பெயர் பலகையில் எழுத வேணும்னு யாருக்குமே தோணலையே.
'ஆப்பரேஷன்' என்னானது?
தெரு நாய்களின் தொல்லையால் எங்கும் நடமாட முடியல. இதன் இன பெருக்கத்தை கட்டுப்படுத்தும் ஆப்பரேஷன் திட்டம் என்னாச்சு. இதுக்காக ஒதுக்கிய நிதி, வரவு - செலவு கணக்கு புத்தகத்தில் மட்டும் பதிவில் இருக்கு. ஆனால், செலவு கணக்கில் குறிப்பிட்டது போல, தெருநாய்களை கட்டுப்படுத்தியதாக தெரியலையே.
இதன் எண்ணிக்கை ஏறுமுகமா இருக்குதே தவிர, குறையலையே. இதை கவனிக்க மாவட்ட கலெக்டர் தான் வரணுமா. அடிப்படை வசதிகளை சொல்வதற்கு கூட, கவுன்சில் கூட்டமும் நடந்த பாடில்லை. இதுபோன்று செயலிழந்த உள்ளாட்சி, எந்த காலத்திலும் இருந்ததில்லை என விபரம் அறிந்த பெரியவங்க சொல்றாங்க.
யார் தீர்ப்பார்?
மத்திய மந்திரி கு.அண்ணா தொகுதி உட்பட மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவு, மைனாரிட்டி ஓட்டுகளால் தான் திசை மாறி போச்சுது என, மாநிலத்தில் ஒரு தரப்பினர் கொண்டாட்டத்தில் இருக்காங்க. கோல்டு சிட்டியிலும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டாங்க.
வக்பு பிரச்னைக்கு எதிரான அதிருப்தி போராட்டத்தின் முடிவே, இதுக்கு பதில் கிடைச்சதாவும் சொல்றாங்க. மண்வாரி இயந்திர தொழிற்சாலை தொழிலாளர் போராட்டம் தீர்வுக்கு கு.அண்ணாவை தான் நம்பி இருந்தாங்க. அவரோ, அவரோட புத்திரர் தோல்வியில் இருந்து மீள முடியாமல் இருக்காரே. பிரச்னையை தீர்க்க, செங்கோட்டையை தான் நாடணுமா?