ADDED : ஜன 30, 2025 11:46 PM
* எதுக்காக அடிமைத்தனம்?
மண்வாரி எந்திரங்கள் தயாரிக்கும் பெரிய கனரக தொழிற்சாலையில் பணி நிரந்தரம் ஆக்க கோரி 26 நாட்கள் ஸ்டிரைக் நடத்தினாங்க. எந்த ஒரு பயனும், உத்தரவாதமும் கிடைக்காமல், வேலைக்கு திரும்பினாங்க. நிர்வாகத்தை நடத்தும் பெரிய ஆபீசரை கன்னா பின்னான்னு ஏசினாங்க. ஒண்ணுக்கும் உதவாமல் போயிடுச்சி.
ஆனால், அந்த போராட்டத்தை நடத்திய தலைவர்களோ, அந்தர்பல்டி அடித்து, குடியரசு தின விழாவுக்கு வந்த அந்த பெரிய ஆபீசருக்கும், அவரோட வீட்டம்மாவுக்கும் மாலை, சால்வை, கிரீடம் அணிவிச்சாங்க.
எங்களைவிட ஒரு நவீன கொத்தடிமைகள் வேறு யாருமே எங்குமே இருக்க முடியாதுன்னு செயலில் காட்டிட்டாங்க. இப்படி சரணாகதி ஆகிறவங்க, எதுக்காக 26 நாட்களாக ஒட்டுமொத்த தொழிலாளர்களை பலியிட வேண்டும்னு பாதித்தவங்க குமுறிட்டு இருக்காங்க.
-------
* பூனைகளை மிரட்டும் எலிகள்!
ரா.பேட்டையில் உள்ள தேசப்பிதா மார்க்கெட்டில் பெருச்சாளிகள் தொல்லை ஓவராக இருக்குதாம். காய்கறி மட்டுமல்ல, எல்லா பொருட்களையும் எலிகள் கூட்டம், 'பதம்' பார்க்குதாம்.
சீரழிந்த சாலைகளை புதுப்பிக்கும் வேலையை துவங்கினால் தான் எலிகள் வலைகளுக்கு முடிவு கிடைக்கும் போல தெரியுது. அந்த வேலையை எப்ப தொடங்க போறாங்களோ?
பூனை 'சைசில்' எலிகள் நடமாட்டம் இருக்குது. பூனைகளே எலிகளை கண்டு, பயந்து ஓடுகிறது. மார்க்கெட்டில் எங்கும் எலிகளின் பொந்துகள் ஜாஸ்தி. இதனை அடைக்க முடியாமல் வியாபாரிகள் தினறுறாங்க. அரசி, பருப்பு தானியங்களின் மூட்டைகளில் ஓட்டைகளை போட்டு துாக்கத்தை கெடுக்குதாம். பெருச்சாளிகள் பெருக்கத்தை ஒழிக்க முனிசி., ஆபீசர்கள் என்ன செய்ய போறாங்களோ?
------
பயனற்ற சமுதாய பவன்!
சாம்பியன் 'பி' பிளாக், வட்டத்தில் ஒன்றும், ஆ. பேட்டை சூ.பாளையத்தில், இன்னொன்றும் முனிசி., நிதியில் 'சமுதாய பவன்' கட்டினாங்க. இதுக்காக பல லட்சம் ரூபாயும் செலவு செய்தாங்க. ஆனாலும், அவற்றை பயன்படுத்தாமல் மூடியே வெச்சிருக்காங்க.
தற்போது, ரா.பேட்டை 2வது பிளாக் பகுதியில் சமுதாய பவன் கட்டப்படுகிறது. இதுக்கு அதே கதியா அல்லது பயன்படுத்த நடவடிக்கை எடுப்பார்களான்னு தெரியல.
ஏற்கனவே, 35 வார்டுகளில் பல கோடியில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. அவை, திறக்கப்படாமலேயே சிதைந்து வருகிறது. செடி கொடி புதர் மண்டி கிடக்குது. அரசு நிதியுதவியை எப்படி வீணாக்குவது என்பதை தெரிஞ்சுக்க வேணுமா. அதுக்கு கோல்டு சிட்டி முனிசி., தான் உதாரணமாக விளங்குது என்பதற்கு இந்த பயன்படுத்தாத கட்டடங்களே சாட்சி.
---------
* வணிக வளாகம் திறக்கப்படுமா?
ரா.பேட்டை பஸ் நிலையத்தில், கோடி ரூபாய்க்கும் அதிகமா செலவு செய்து கட்டப்பட்ட வணிக வளாக கடைகள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்குது. இதனை என்ன செய்ய போறாங்களோ. கடைகளை ஏலம் எடுக்க யாருமே முன் வராததால், அதை சும்மா விட்டு வெச்சிருக்காங்களாம். மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணாக்கலாமா?
அந்த மேல் மாடிகளில் உள்ள காலியிடங்கள் சட்டவிரோத கும்பல்களுக்கு இருப்பிடமாக மாறியிருக்குது. மது உறைகள், பாட்டில்களே இதுக்கு சாட்சியாக இருக்குது. இந்த கடைகளை ஏலம் விடாமல் மாவட்ட கலெக்டர், மாநில நகராட்சித் துறை வேடிக்கை பார்க்கிறதே. இதை கூட நகரத்தை காப்பாற்றும் கவுன்சிலர்கள் கண்டுகொண்டதாக தெரியலயே.
***

