ADDED : மார் 18, 2024 06:14 AM

சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., பச்சேகவுடா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இவர் காங்கிரசில் இணையலாம் என, தகவல் வெளியாகிஉள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதியில் பா.ஜ.,வில் வென்று எம்.பி.,யானவர் பச்சேகவுடா.
இவரது மகன் சரத் பச்சேகவுடா, முந்தைய சட்டசபை தேர்தலில் பெங்களூரு ரூரல், ஹொஸ்கோட் தொகுதியில் பா.ஜ., சீட் எதிர்பார்த்தார். கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது இவர் காங்கிரசில் இணைந்துள்ளார்.
மகனுக்கு சீட் தராததால், பா.ஜ., தலைவர்கள் மீது, பச்சேகவுடா கோபத்தில் உள்ளார். கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளார். சட்டசபை தேர்தலில் கட்சி வேட்பாளர் நாகராஜுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாமல், தன் மகனுக்காக பணியாற்றினார். இதனால், நாகராஜ் தோற்றார்.
பா.ஜ.,வில் இருந்து மனதளவில் விலகியுள்ள பச்சேகவுடா, இம்முறை லோக்சபா தேர்தலில், போட்டியிட வேண்டாம் என, முடிவு செய்துள்ளார். கட்சியில் இருந்து விலகவும் தயாராகிறார். அடிப்படை உறுப்பினர் பதவியை, இன்று ராஜினாமா செய்யவும் வாய்ப்புள்ளது.

