பெங்., பல்கலை வளாகம் வழியே சரக்கு வாகனங்கள் செல்ல தடை
பெங்., பல்கலை வளாகம் வழியே சரக்கு வாகனங்கள் செல்ல தடை
ADDED : டிச 20, 2024 05:39 AM
பெங்களூரு: பெங்களூரு பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஞானபாரதி கல்வி வளாகம் வழியாக பி.எம்.டி.சி., பஸ்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து வகை சரக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அமைதி தவழ வேண்டிய இடமாக, பெங்களூரு பல்கலைக்கழகமான ஞானபாரதி கல்வி வளாகம் திகழ்கிறது.
உல்லாள் உப நகர், மரியப்பனபாளையா வழியாக மைசூரு செல்லும் வாகனங்கள் ஞானபாரதி பல்கலைக்கழக வளாகம் வழியே செல்கின்றன.
லாரி, டெம்போ, சரக்கு வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
வாகனங்கள் எழுப்பும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.
கடந்த 2022ம் ஆண்டு, எம்.எஸ்.சி., படிக்கும் ஒரு மாணவி, பி.எம்டி.சி., பஸ் ஏறும் போது கால்தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்போதே பல்கலைக்கழக நிர்வாகம், நகர காவல் துறை, மாநகராட்சி, பி.டி.ஏ., போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தது.
ஞானபாரதி கல்வி வளாகம் வழியே கனரக வாகனங்களை செல்ல தடை கோரியிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஞானபாரதி பல்கலைக்கழகத்தின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து, நடைமுறைப்படுத்த பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு, கடந்த புதன் கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, ஞானபாரதி பல்கலைக்கழக வளாகம் வழியே பி.எம்.டி.சி., பஸ்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
அனைத்து வகை சரக்கு வாகனங்கள் மாற்றுவழியாக வெளிவட்ட சாலை, நாகரபாவி வட்ட சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது.
'இது குறித்த உரிய அறிவிப்பு பதாகைகளை தகுந்த இடங்களில் வைக்க வேண்டும்' என்றும், உள்ளூர் போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தர விட்டுள்ளார்.