கட்சி மாற அழைப்பு: சுஷில்குமார் ஷிண்டே பேட்டி: பா.ஜ., மறுப்பு
கட்சி மாற அழைப்பு: சுஷில்குமார் ஷிண்டே பேட்டி: பா.ஜ., மறுப்பு
UPDATED : ஜன 18, 2024 01:12 PM
ADDED : ஜன 18, 2024 12:50 PM

மும்பை: பா.ஜ.,வில் சேர தனக்கு இரண்டு முறை அழைப்பு வந்தது எனவும், ஆனால், நான் காங்கிரஸ் விசுவாசி என்பதால், கட்சியில் இருந்து ஒரு போதும் விலக மாட்டேன் என முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். ஆனால், அப்படி அழைப்பு ஏதும் விடுக்கவில்லை என பா.ஜ., விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவருமான சுஷில்குமார் ஷிண்டே, மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: எனக்கும், எனது மகள் பிரணிதிதை ( மஹா., எம்.எல்.ஏ.,)க்கும் பா.ஜ.,வில் இணையும்படி இரண்டு முறை அழைப்பு வந்தது.
நான் எப்படி கட்சி மாறுவேன்? எனது வாழ்க்கை முழுவதையும் காங்கிரசுக்கு அர்ப்பணித்தவன். அப்படி இருக்கையில் வேறு கட்சிக்கு எப்படி செல்வேன். அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றார்.
யார்
இது தொடர்பாக நிருபர்கள் அவரிடம், உங்களை பா.ஜ.,விற்கு அழைத்தது யார்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஷிண்டே, அவரின் பெயரை வெளியிட மறுத்ததுடன், அவர் பெரிய பதவியில் உள்ளவர் என்றார். மேலும், , நான் தீவிர காங்கிரஸ் காரன். எனது கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என அவரிடம் கூறிவிட்டேன் என்றார்.
விளக்கம்
இது தொடர்பாக மஹா., மாநில பா.ஜ., தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், ஷிண்டேவையும், அவரது மகளையும் பா.ஜ.,வில் இணையும்படி யாரும் அழைக்கவில்லை என்றார்.
சந்திப்பு
இதனிடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், சுஷில் குமார் ஷிண்டேவை சந்தித்து பேசினார். இலக்கிய விழா தொடர்பான அழைப்பிதழை ஷிண்டேவிடம் வழங்கவே,பாட்டீல் சந்தித்ததாக கூறப்படுகிறது.