ADDED : டிச 13, 2024 05:29 AM

பெலகாவி: ''நீதிமன்றங்களில் வழக்குகளின் விசாரணை தாமதமாவதை தவிர்க்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,'' என சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் பாரதி ஷெட்டி சார்பில், உறுப்பினர் ரவிகுமார் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது:
நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணை தாமதமாவதை, மாநில அரசு தீவிரமாக கருதுகிறது. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்நாடக அரசு வழக்கு நிர்வகிப்பு சட்டம் - 2023 அமலுக்கு வந்துள்ளது. விதிமுறைகள் வகுத்துள்ளது. இந்த விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வரும்.
கர்நாடகாவின் வெவ்வேறு நீதிமன்றங்களில், 2021ல் அரசுக்கு சாதகமாக 3,216 தீர்ப்புகளும், 2022ல் 2,277 தீர்ப்புகளும், 2023ல் 2,213 தீர்ப்புகளும் வெளியாகின.
அரசுக்கு எதிராக 2021ல், 20,492 தீர்ப்புகள், 2022ல் 16,853 தீர்ப்புகள், 2023ல் 14,994 தீர்ப்புகளும் வெளியாகின.
இவ்வாறு அவர் கூறினார்.

