கட்டணங்களை உயர்த்தக்கூடாது விமான நிறுவனங்களுக்கு அரசு அறிவுரை
கட்டணங்களை உயர்த்தக்கூடாது விமான நிறுவனங்களுக்கு அரசு அறிவுரை
ADDED : ஏப் 24, 2025 03:49 AM
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, காஷ்மீர் சென்ற சுற்றுலா பயணியர், அவசரம் அவசரமாக அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
கோடை விடுமுறைக்கு காஷ்மீர் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள், காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகருக்கு முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகளை ரத்து செய்கின்றனர்.
நேற்று முன்தினம் ஏராளமானோர் புறப்பட்டதால், டில்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு விமான டிக்கெட் விலை 20,000 ரூபாய் வரை, உயர்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து அடுத்தடுத்து விமானங்கள் இயக்கப்பட்டன.
நேற்று காலை 6 மணியில் இருந்து பிற்பகல் வரை 3,337 பேர் புறப்பட்டனர். 20 விமானங்கள் இயக்கப்பட்டதால், கூட்ட நெரிசல் மற்றும் அதிக விமானங்களை கையாளும் வகையில், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், ஸ்ரீநகர் வழித்தடத்தில் விமான கட்டணங்களில் எந்தவித மாறுதலும் செய்யக் கூடாது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் விமானங்களை இயக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக, அனைத்து விமான போக்குவரத்து நிறுவன அதிகாரிகளுடனும் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதன்பிறகு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
இக்கட்டான இந்த தருணத்தில், எந்தவொரு பயணிக்கும் சுமை ஏற்றாமல், வழக்கமான விமான கட்டணத்தையே தொடர வேண்டும்.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை, அந்தந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முழு ஒத்துழைப்பு வழங்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டில்லி, மும்பையில் இருந்து ஸ்ரீநகருக்கு தினமும் ஐந்து விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா நிறுவனம், நேற்று கூடுதலாக இரண்டு விமானங்களை இயக்கியது.
ஏப்.,30 வரை, ஸ்ரீநகர் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்தால், முழு பணமும் திரும்பத் தருவதாகவும், வேறு நாளில் முன்பதிவை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. இதுபோல, இண்டிகோ, ஆகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்களும் அறிவித்துள்ளன.