நீதிபதி நாகரத்னா அதிருப்தியை மீறி 'கொலீஜியம்' பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
நீதிபதி நாகரத்னா அதிருப்தியை மீறி 'கொலீஜியம்' பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ADDED : ஆக 28, 2025 12:22 AM

புதுடில்லி: பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் எம்.பஞ்சோலியை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, 'கொலீஜியம்' அளித்த பரிந்துரைக்கு மூத்த நீதிபதி பி.வி.நாகரத்னா அதிருப்தி தெரிவித்த நிலையில், நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வது, பணியிட மாற்றம் செய்வது போன்ற முடிவுகளை, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு எடுக்கிறது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பில், மூத்த நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகியோர் உள்ளனர்.
இந்த கொலீஜியம் அமைப்பின் கூட்டம், கடந்த 25ல் நடந்தது. அப்போது, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் எம்.பஞ்சோலி ஆகியோரை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று, இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இது குறித்த அறிவிப்பை பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வெளியிட்டார்.
இதன்படி, நீதிபதிகள் விபுல் எம்.பஞ்சோலி, அலோக் ஆராதே ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். இதன் மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட அளவான 34 ஆக அதிகரிக்கும்.
முன்னதாக, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் எம்.பஞ்சோலியை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்ததற்கு, அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள மூத்த நீதிபதி பி.வி.நாகரத்னா அதிருப்தி தெரிவித்திருந்தார். இருந்தும், அந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்
நீதிபதி மாற்றம்
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டில்லி, அலகாபாத், கேரளா, கொல்கட்டா, ஆந்திரா உட்பட 14 மாநிலங்களின் உயர் நீதிமன்ற நீதிபதிகளை மாற்றவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானு, கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் பிறந்த நீதிபதி நிஷா பானு, மதுரை சட்டக் கல்லுாரியில் பயின்றார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியை துவங்கிய அவர், 2016ல், நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.