ரூ.9,823 கோடி முதலீடு திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்
ரூ.9,823 கோடி முதலீடு திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்
ADDED : டிச 24, 2024 06:33 AM

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தலைமையில், மாநில அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உயர்மட்ட கமிட்டி கூட்டம், பெங்களூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் 9,823.31 கோடி ரூபாய் செலவிலான தொழில் முதலீடு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:
டி.என்.சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஐ.டி.ஐ.ஆர்., தேவனஹள்ளியில், 998 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 467 வேலை வாய்ப்புகள் உருவாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு கிளஸ்டர் தொழிலில், 3,425 கோடி ரூபாய் செலவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மைசூரின் கோச்சனஹள்ளியில் 60 கோடி ரூபாய், ஹாரோஹள்ளியில், சம்செரா இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின், 2,150 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்கு, அனுமதி அளிக்கப்பட்டது.
சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் துணை உற்பத்தி பொருட்களில், விவசாயிகளுக்கு பங்கு கொடுப்பது குறித்து ஆய்வு செய்யும்படியும், இவ்விஷயத்தில் தமிழகம், மஹாராஷ்டிராவில் பின்பற்றப்படும் விதிமுறைகள் ஆய்வு செய்யும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழில் துவங்க, கே.ஐ.ஏ.டி.பி.,யிடம் நிலம் பெற்று, தொழில் துவங்காவிட்டால் அபராதம் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. விதிகளின் படி, ஆலைகள் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 10 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.