ADDED : ஏப் 04, 2025 10:22 PM
புதுடில்லி:முதல்வராக இருந்த போது இருந்து வசிக்கும் மதுரா சாலை பங்களாவையே தனக்கு ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி சிங் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
டில்லி சட்டசபைத் தேர்தல் பிப்.,5ல் நடந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வென்று பா.ஜ., ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்தது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக, முன்னாள் முதல்வர் ஆதிஷி சிங் பதவியேற்றுள்ளார்.
ஆதிஷி முதல்வராக இருந்தபோது, மதுரா சாலையில் ஏ.பி.-17 என்ற எண் கொண்ட பங்களாவில் வசித்தார். இப்போது வரை அதைக் காலி செய்யவில்லை.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதல்வராக ஆதிஷி சிங் பதவி வகித்தபோது, மதுரா சாலையில் அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. அங்குதான் இப்போதும் வசிக்கிறார். தற்போது, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிவிட்டதால், மதுரா சாலை பங்களாவையே தனக்கு ஒதுக்கீடு செய்யுமாறு கடிதம் அனுப்பியுள்ளார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அன்சாரி சாலையில் பங்களா ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இன்னும் முடிவு எடுக்கவில்லை.
மதுரா சாலையில் பாரத் மண்டபத்துக்கு எதிரே அமைந்துள்ள ஏ.பி.-17ம் எண் பங்களாவில், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா பல ஆண்டுகளாக வசித்தார். அவர், சிறைக்கு சென்றவுடன் அந்த பங்களா ஆதிஷி சிங்குக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த பங்களாவில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தும் பல ஆண்டுகளாக வசித்துள்ளார்.
பா.ஜ., அரசு பதவியேற்று இரு மாதங்களாகியும், முதல்வர் ரேகா குப்தாவுக்கும் இன்னும் அதிகாரப்பூர்வ பங்களா ஒதுக்கவில்லை.
வருமான வரித்துறை அலுவலகம் அருகே லுடியன்ஸ் டில்லியில், முதல்வர் ரேகாவுக்கு பொருத்தமான பங்களா ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவர் இன்னும் தன் சொந்த வீட்டில்தான் வசிக்கிறார். மற்ற அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டு குடியேறி விட்டனர்.
முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்த கொடிமரச் சாலை பங்களாவில் தான் வசிக்கப் போவதில்லை என ரேகா குப்தா ஏற்கனவே அறிவித்து விட்டார்.