ADDED : செப் 30, 2024 10:48 PM

மாண்டியா : தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி கவிழ்ந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட பயணியர் காயமடைந்தனர்.
பெங்களூரில் இருந்து மாண்டியாவுக்கு 20க்கும் மேற்பட்ட பயணியருடன் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நேற்று காலை புறப்பட்டது. பெங்களூரு - மைசூரு விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த பஸ், சர்வீஸ் சாலையில் இடதுபுறம் சென்றது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் நின்றிருந்த கன்டெய்னர் மீது மோதி கவிழ்ந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், உடனடியாக, பஸ்சுக்குள் சிக்கியவர்களை, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து மீட்டனர். மீட்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட பயணியர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், மாண்டியா ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இச்சம்பவம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூக வலைதளத்தில் பரவியது.
சாலையில் கவிழ்ந்த அரசு பஸ்சுக்குள் இருந்த பயணியரை அப்பகுதியினர் மீட்டனர்.