ADDED : பிப் 03, 2024 11:03 PM

பெங்களூரு,: அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தை லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ., பயன்படுத்துவதை எதிர்கொள்ளும் வகையில், கர்நாடகாவில் 100 ராமர் கோவிலை சீரமைப்பதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க, கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், ஹிந்துக்களிடம் பா.ஜ.,வுக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது.
இதை லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு பா.ஜ., பயன்படுத்துமோ என்ற அச்சம் காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளது. இதை எதிர்கொள்ள அக்கட்சி தயாராகி வருகிறது. கர்நாடக ஹிந்து அறநிலைய துறை, மாநிலத்தில் 100 ராமர் கோவில்களை சீரமைக்க, பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாநில அரசும், 'ராமர், ஹிந்துக்களுக்கு எதிரான முத்திரையை அகற்ற 'மாஸ்டர் பிளான்' செய்துள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது:
கர்நாடகாவில் 100 ராமர் கோவில்களை சீரமைக்க, பட்ஜெட்டில் நிதி ஒதுக்க அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ராமர் அனைவருக்கும் கடவுள். பா.ஜ.,வினருக்கு மட்டும் கடவுள் அல்ல.
ராமர் பிறந்து பல ஆயிரம் ஆண்டுகளாகிறது. எத்தனை ராமர் கோவில்கள் கட்டப்பட்டு உள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கதவுகளை திறந்து வழிபட அனுமதித்தவர் ராஜிவ். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எத்தனை கோவில்களுக்கு மானியம் வழங்கி உள்ளோம் என்ற பட்டியலை வெளியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம் ராமர் பக்தர்களை கவர காங்கிரஸ் முன்வந்து உள்ளது.