ADDED : ஜன 26, 2025 08:15 AM

பல்லாரி : அரசு மருத்துவமனை டாக்டரை மர்ம கும்பல்கடத்திச் சென்றது.அவரது குடும்பத்தினரிடம் ௬ கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறது.
பல்லாரி நகரின் சத்யநாராயணா பேட் அருகில் வசிப்பவர் டாக்டர் சுனில், 42. இவர் பல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.
இவர் தினமும் காலை நடைப்பயிற்சி செய்வதுவழக்கம். அதேபோன்று நேற்று காலை 6:00 மணிக்கு, தன் வீட்டருகில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது காரில் வந்த மர்மகும்பல், அவரை கடத்திச்சென்றது.
அதன்பின் சுனிலின் மொபைல் போனிலேயே, அவரது தம்பியும், மது விற்பனையாளர் சங்கத்தலைவருமான வேணுகோபால் குப்தாவை தொடர்பு கொண்டு பேசி, ௬ கோடி ரூபாயும், தங்கமும் கேட்டு மிரட்டினர்.
இதுதொடர்பாக, பல்லாரி போலீஸ் நிலையத்தில் வேணுகோபால் குப்தா புகார் அளித்தார். போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்கின்றனர்.
பல்லாரி புறநகரின் மோகாவை நோக்கி கடத்தல்காரர்கள் சென்றிருப்பது தெரிய வந்தது. இப்பாதையில் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முக்கியமான பகுதிகளில் தடுப்பு வைத்து வாகனத்தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். டாக்டர் சுனிலை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி., ஷோபாராணி, சம்பவ இடத்தை பார்வையிட்டார். விசாரணை குழுவினருக்கு ஆலோசனைகூறுகிறார்.

