சிக்கிமில் வியாழக்கிழமைகளில் பாரம்பரிய உடை அணிய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு
சிக்கிமில் வியாழக்கிழமைகளில் பாரம்பரிய உடை அணிய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு
ADDED : நவ 04, 2025 12:26 AM

காங்டாக்:  சிக்கிமில், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் வியாழக்கிழமைகளில், மாநிலத்தின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய உடை அணிய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது. இம்மாநில உள்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை:
சிக்கிமின் வளமான கலாசாரத்தை பாதுகாக்க, முதல்வர் பிரேம் சிங் தமாங் அயராது உழைத்து வருகிறார். அவரது முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும், வியாழக்கிழமைகளில் பாரம்பரிய உடை அணிய வேண்டும்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. சிக்கிமின் வளமான கலாசாரத்தை அடுத்த தலைமுறையினரிடையே எடுத்துச் செல்வதும், அரசு ஊழியர்களிடையே பாரம்பரிய மதிப்புகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிக்கிமின் பாரம்பரிய உடைகள், அங்குள்ள பல்வேறு இன சமூகங்களான லெப்சாஸ், பூட்டியா, கூர்கா ஆகியவற்றின் தனித்துவமான பாணிகள் மற்றும் கலாசார முக்கியத்துவத்தை அழகாக பிரதிபலிக்கின்றன.

