ஆம் ஆத்மி தொடர்ந்த ஏழு வழக்குகளை திரும்ப பெற சுப்ரீம் கோர்ட்டில் அரசு மனு
ஆம் ஆத்மி தொடர்ந்த ஏழு வழக்குகளை திரும்ப பெற சுப்ரீம் கோர்ட்டில் அரசு மனு
ADDED : மே 22, 2025 09:20 PM
புதுடில்லி:யமுனை நதியை சீரமைக்க துணைநிலை கவர்னர் தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தது உட்பட, ஆம் ஆத்மி ஆட்சியில் கவர்னருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஏழு வழக்குகளை திரும்பப் பெறுவதாக, உச்ச நீதிமன்றத்தில் டில்லி அரசு நேற்று மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில், டில்லி அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி நேற்று தாக்கல் செய்த மனு:
திடக்கழிவு மேலாண்மை, யமுனை நதியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட குழுக்களில் துணைநிலை கவர்னரின் அதிகாரத்தை எதிர்த்தும், சட்டங்கள் மற்றும் அவசரச் சட்டங்களின் செல்லுபடிதன்மைக்கு எதிராகவும் டில்லியின் முந்தைய ஆம் ஆத்மி அரசு ஏழு வழக்குகள் தாக்கல் செய்துள்ளன. அந்த ஏழு வழக்குகளையும் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனு குறித்து இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
யமுனை நதி சீரமைப்பு தொடர்பாக, துணைநிலை கவர்னர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அப்போதைய ஆம் ஆத்மி அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 2023ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி மனுத்தாக்கல் செய்தது. இதையடுத்து, தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறுத்தி வைத்து 2023ம் ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
டில்லியில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, பிப்ரவரியில் நடந்த சட்டசபையில் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ., ஆட்சி அமைத்தது.