அதிகரிக்கும் மருத்துவ செலவு: கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய திட்டம்
அதிகரிக்கும் மருத்துவ செலவு: கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய திட்டம்
ADDED : ஜூலை 10, 2025 06:10 PM

புதுடில்லி: நாட்டில் அதிகரித்து வரும் மருத்துவச் செலவை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மருத்துவ செலவு 13 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், இது சர்வதேச அளவில் 10 சதவீதமாக உள்ளது.மத்திய அரசும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) நடத்திய ஆய்வில், சிகிச்சை அளிப்பதற்கான செலவை மருத்துவமனைகள் அதிகரிப்பதுடன், அதிக காப்பீடு எடுத்த பாலிசிதாரர்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால்,காப்பீட்டு நிறுவனங்கள் அதிக காப்பீட்டு தொகையை வசூலிக்க தூண்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.இதனையடுத்து செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக, மருத்துவ காப்பீட்டு சிகிச்சைக்கான பணம் கோரும் இணையதளத்தை மத்திய நிதித்துறை மற்றும் ஐஆர்டிஏஐ அமைப்பின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.