1,100 ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் ஓராண்டுக்குள் துவக்க அரசு திட்டம்
1,100 ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் ஓராண்டுக்குள் துவக்க அரசு திட்டம்
ADDED : ஜூன் 17, 2025 08:32 PM

புதுடில்லி:“தலைநகர் டில்லியில் சிறந்த சுகாதார உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதே பா.ஜ., அரசின் நோக்கம்,” என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
டில்லி அரசின் சுகாதாரத் துறை சார்பில், 'ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்' என்ற ஆரம்ப சுகாதார நிலையத்தை, தீஸ் ஹசாரியில் நேற்று திறந்து வைத்த முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
டில்லியில் ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் திறக்க மத்திய அரசு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, 2,400 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால், அப்போதைய ஆம் ஆத்மி அரசு அந்த நிதியை பயன்படுத்தவில்லை. ஆம் ஆத்மி அரசு துவக்கிய 'மொஹல்லா கிளினிக்'குகள் ஊழல் மையங்களாகத்தான் செயல்பட்டன.
மொஹ்ல்லா கிளினிக்கில், நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய, அவுட்சோர்சிங் செய்து ஊழல் செய்தனர். அதேபோல, கிளினிக் அமைக்க வாடகைக் கட்டடத்திலும் பெரும் முறைகேடு நடந்துள்ளது.
மத்திய அரசு ஒதுக்கிய நிதி, வரும் மார்ச் மாதத்துக்குள் காலாவதி ஆகிவிடும். எனவே, மார்ச் மாதத்துக்குள் மாநகர் முழுதும், 1,100 ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் துவக்கப்படும்.
முந்தைய அரசு ஐந்து ஆண்டுகளில் செய்திருக்க வேண்டிய பணிகளை, ஓராண்டுக்குள் பா.ஜ., அரசு செய்ய வேண்டும். ஆனால், அதை திறம்பட செய்து முடிப்போம்.
சுகாதார உள்கட்டமைப்பில் தலைநகர் டில்லியை சிறப்பான இடத்துக்கு கொண்டு செல்வதே பா.ஜ., அரசின் நோக்கம்.
சரியான சிகிச்சை கிடைக்காமல் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்தபடி, 1,000 பேருக்கு இரண்டு படுக்கைகள் இருக்க வேண்டும்.
டில்லியில் 1,000 பேருக்கு 0.42 படுக்கைகள் உள்ளன. அதாவது 1,000 பேருக்கு ஒரு படுக்கை கூட இல்லை. எனவே, 1,000 பேருக்கு மூன்று படுக்கைகள் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
டில்லி மாநகரில் நேற்று, 33 இடங்களில் ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மத்திய அரசின், 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் துவக்கப்படுகின்றன.