UPDATED : மார் 29, 2026 04:04 AM
ADDED : மார் 29, 2026 01:33 AM

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன், உலக இளைஞர் தினத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட கனவு திட்டம், பி.எம்.கே.வி.ஒய்., எனப்படும் 'பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம்'.
2022 முதல் 2025 வரையிலான இந்த திட்டத்தின் தரவுகளை கேட்டால் வியப்பு ஏற்படும். செலவு செய்யப்பட்ட தொகை, 9,261 கோடி ரூபாய்; திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்றவர்களின் எண்ணிக்கை 1.10 கோடி!
பெரிதாக ஒன்றும் இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், இந்த திட்டம் குறித்த பின் நாட்களில் ஒவ்வொன்றாக வெளியான தகவல்கள், மோசமான நிலைமையின் தீவிரத்தை காட்டியது.
கசப்பான உண்மை இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து பார்லி.,யில் 2025ல் தாக்கலான தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை, ஒரு கசப்பான உண்மையை உரக்க சொன்னது.
அதாவது, பி.எம்.கே.வி.ஒய்., திட்டத்தின் கீழ் யார் பயிற்சி பெறுகிறார்கள் என்ற அடிப்படை விஷயம் கூட அரசுக்கு அறவே தெரியாது. இந்த திட்டத்தின் டிஜிட்டல் ஜீவநாடியான 'ஸ்கில் இந்தியா' தளத்தில் பதிவு செய்வதற்கு, திறன் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் தங்களின் வங்கி கணக்கு விபரம், மின் அஞ்சல் முகவரி, மொபைல் எண்களை கொடுக்க வேண்டியது அவசியம்.
ஆனால், அந்த தரவுகளை தலைமை கணக்கு அதிகாரி ஆய்வு செய்தபோது, பயிற்சி பெற்ற 95.90 லட்சம் இளைஞர்களில் 90.66 லட்சம் பேர், 'வங்கி கணக்கு' என்ற இடத்தில் 'எதுவும் இல்லை' என்றோ, பூஜ்ஜியங்களையோ பதிவு செய்திருந்தனர். பலர் எதுவுமே குறிப்பிடாமல் வெற்றிடமாக விட்டிருந்தனர்.
கிட்டத்தட்ட 12,000 பேர் வங்கி கணக்குகள் மட்டுமே ஒழுங்காக கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், அதிகாரிகளுக்கு அங்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. அந்த 12,000 வங்கி கணக்குகளை தங்கள் கணக்குகளாக கிட்டத்தட்ட 52,000 பேர் மாறி மாறி காட்டியிருந்தனர்.
மின் அஞ்சல் தரவுகள் இதற்கும் மேல். வெறும் 53 மின் அஞ்சல் முகவரிகளை, சகட்டு மேனிக்கு 44 லட்சம் பேர் தங்கள் முகவரிகளாக கொடுத்து இருந்தனர். யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைக்க முடியாத, 'abc@gmail.com' '123@gmail.com' போன்ற முகவரிகளை, பல்லாயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டதாக காட்டப்பட்டு இருந்தது.
இது ஒருபுறமிருக்க, பயிற்சி முடித்து, 'திறன்' சான்றிதழ் பெற்றிருந்த 4,330 பேரின் மின் அஞ்சல் முகவரிகளாவது ஒழுங்காக இருக்கின்றனவா என்று அதிகாரிகள் பரிசோதித்தனர். அதில் 36.50 சதவீத அஞ்சல்கள் 'பவுன்ஸ்' ஆகி, அப்படி மின்னஞ்சல் முகவரிகளே இல்லை என்பதை காட்டின. பதில் கொடுத்த 171 முகவரிகளை வைத்து கூட ஆறுதல் அடைய முடியவில்லை. காரணம், அவற்றில் 131 முகவரிகள் பயிற்சி பெற்றவர்களுடையவை இல்லை, பயிற்சி அளித்த நிறுவனங்களுடைய முகவரிகள்!
இப்படி பயிற்சி பெற்றவர்களின் அடையாளங்களிலேயே இவ்வளவு குழப்பங்கள் இருக்கும்போது, பயிற்சி பெறுவதற்கு அவர்கள் வைத்திருந்த தகுதி மட்டும் நம்புகிற மாதிரியா இருக்கும்? 705 பணிகளுக்கான திறன் சான்றிதழ் பெற்ற 6.54 லட்சம் பேர், அந்த பணிகளுக்கான அடிப்படை தகுதி கூட இல்லாதவர்கள். ஓட்டுநர் பணியில் சேர்வதற்கான 'திறன்' பெற்ற 1,142 பேருக்கு, ஓட்டுநர் உரிமம் பெற தேவையான 18 வயது கூட நிரம்பி இருக்கவில்லை!
போலி ஆவணங்கள் பயிற்சி பெற்றவர்கள்தான் இப்படி என்றால், பயிற்சி அளித்த நிறுவனங்களும் இதற்கு சளைத்தவை இல்லை. இல்லாத நிறுவனங்கள், மாயையான மையங்களில், திரள் திரளான மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்திருப்பதாக கணக்கு காட்டியிருந்தன.
இப்படி நிறுவனங்களின் பயிற்சியிலும் போலிகள் என்றால், பயிற்சிக்கு பின் இளைஞர்களுக்கு கிடைத்ததாக அவை கூறிய புள்ளிவிபரங்களும் பொய்யும், புரட்டுமாக இருந்தன. கேரளாவில் ஒரு பயிற்சி நிறுவனம் 14 பேருக்கு ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்ததாம்.
போய் பார்த்தால், அந்த நிறுவனத்தில் பணியாற்றியவர்களே மொத்தம் 5 பேர்தான்! அப்பாயின்ட்மென்ட் கடிதங்கள், சம்பள ஸ்லிப்புகள், நிறுவன முத்திரைகள் என, வேலைவாய்ப்புக்கான ஆதாரங்களாக ஏராளமான நிறுவனங்கள் கொடுத்த ஆவணங்கள் போலியானவை என்பதும் வெட்ட வெளிச்சமானது.
எல்லாவற்றுக்கும் பின், பி.எம்.கே.வி.ஒய்., திட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதை புரிந்துகொண்ட மத்திய அரசு, ஒரு வழியாக குறைகளை களையும் வேலையில் இறங்கியது. அத்திட்டத்தை பி.எம்., சேது திட்டத்துடன் இணைத்தது. தனியார் பயிற்சி மையங்களை சாராமல், அரசுக்கு சொந்தமான ஐ.ஐ.டி.,க்களை அடிப்படையாக கொண்டு, 800 கிளை மையங்கள் வாயிலாக திறன் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இருந்தாலும், பல ஆண்டுகளாக அலட்சியம் செய்யப்பட்ட ஐ.ஐ.டி.,க்களில் கட்டமைப்பு உறுதியாக இல்லாதது, மாநில அரசுகளின் கீழ் அவை இருப்பதால், மத்திய - மாநில அரசுக்கு இடையிலான உரசல், இத்திட்டத்தை பாதிக்கும் வாய்ப்பு என பல பிரச்னைகள் இன்னும் தீர ் க்கப்படாமல் உள்ளன.
இருந்தாலும், பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்று, சரியான நடவடிக்கைகளை அரசு எடுத்தால் தான், 60,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் துவங்கப்பட்ட திட்டத்துக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
பி.எம்.கே.வி.ஒய்., திட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதை புரிந்துகொண்ட மத்திய அரசு, ஒரு வழியாக குறைகளை களையும் வேலையில் இறங்கியது. தனியார் பயிற்சி மையங்களை சாராமல், அரசுக்கு சொந்தமான ஐ.ஐ.டி.,க்கள் வாயிலாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தது.

