தமிழகத்தில் ஏ.ஐ., ஆய்வகம் 'கூகுள்' உடன் அரசு பேச்சு
தமிழகத்தில் ஏ.ஐ., ஆய்வகம் 'கூகுள்' உடன் அரசு பேச்சு
ADDED : அக் 12, 2025 01:25 AM

சென்னை:தமிழகத்தில் ஏ.ஐ., தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பது தொடர்பாக, 'கூகுள்' நிறுவனத்துடன், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் பேச்சு நடத்தியுள்ளது.
உலகம் முழுதும் ஏ.ஐ., தொழில்நுட்பம் விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம், மனிதர்களை விட வேகமாக மிகப்பெரிய தரவு தொகுப்புகளை பகுப்பாய்வு செய்து, அதிலிருந்து பயனுள்ள தகவல்களை தனியே பிரித்தெடுக்கவும், முன்கணிப்புகளை செய்யவும் உதவுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் குழு, கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா சென்றிருந்தபோது தமிழகத்தில் ஏ.ஐ., தொழில்நுட்ப ஆய்வகங்களை அமைக்க, கூகுள் நிறுவனத்துடன் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. ஆனால், ஓராண்டாகியும் இன்னும் ஆய்வகம் அமைக்கப்படவில்லை.
எனவே, ஏ.ஐ., தொழில்நுட்ப ஆய்வகங்களை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த, 'கூகுள்' நிறுவனத்துடன், வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்புகளால், கூகுள் உடன் இணைந்து ஆய்வகம் அமைப்பதில் தாமதமானது. அடுத்த ஆண்டு துவக்கத்திற்குள் ஆய்வக பணிகளை துவக்கி, ஆறு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.