எனக்கு அதிகாரம் இல்லையா; பொறுத்திருந்து பாருங்க: துணிந்து விட்டார் கேரள கவர்னர்
எனக்கு அதிகாரம் இல்லையா; பொறுத்திருந்து பாருங்க: துணிந்து விட்டார் கேரள கவர்னர்
ADDED : அக் 10, 2024 11:03 AM

திருவனந்தபுரம்: 'எனக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்' என கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் பதிலடி கொடுத்தார்.
கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் 150 கிலோ தங்கம் மற்றும் ரூ.123 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் மாநில போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் தேச விரோத செயல்களுக்காக கேரளாவுக்கு நுழைகிறது என முதல்வர் பினராயி விஜயன் கூறியது பரபரப்பை கிளப்பியது.
இது தொடர்பாக, தன்னிடம் தெரிவிக்காதது ஏன் என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் கேள்வி எழுப்பி இருந்தார். கவர்னரின் நேரடி தலையீடு விதிகளுக்கு முரணானது என பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இது குறித்து, இன்று(அக்.,10) கவர்னர் ஆரிப் முகமது கான் நிருபர்கள் சந்திப்பில், ' மாநிலத்தில் தேச விரோத செயல்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற விஷயங்கள் ஜனாதிபதியிடம் தெரிவிக்க வேண்டும். எனக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
முதல்வரிடம் இருந்து திருப்திகரமான பதில் வரும் வரை விட மாட்டேன். அரசியல் காரணங்களுக்காக முதல்வர் பினராயி பொய்களை பரப்புகிறார். அவர், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை மறைக்கிறார்,' என்றார்.