புயலை கிளப்பது கேரளா அமைச்சர்களின் தொலை பேசி ஒட்டு கேட்பு விவகாரம்: அறிக்கை கேட்கும் கவர்னர்
புயலை கிளப்பது கேரளா அமைச்சர்களின் தொலை பேசி ஒட்டு கேட்பு விவகாரம்: அறிக்கை கேட்கும் கவர்னர்
UPDATED : செப் 11, 2024 07:34 PM
ADDED : செப் 11, 2024 06:51 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் அமைச்சர்களின் தொலைபேசி உரையாடல்களை போலீசார் ஒட்டு கேட்டதாக அம்மாநில ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அன்வர் கூறிய குற்றச்சாட்டு குறித்து கவர்னர் ஆரிப் முகமதுகான் அறிக்கை தாக்கல் செய்ய முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்ட நிலாம்பூர் தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., அன்வர் சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அதில் கேரள அமைச்சர்களின் தொலைபேசி உரையாடல்களை, முதல்வரின் அலுவலக செயலர், போலீஸ் உயரதிகாரிகள் ஒட்டு கேட்பதாகவும், இதில் அமைச்சர்கள் ,சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆகியோர் தங்க கடத்தல், மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறியிருந்தார்.இதில் பத்தனம்திட்டா, மலப்புரம் மாவட்ட எஸ்.பி., சுஜிதாசிற்கு தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. கவர்னர் ஆரிப் முகமது கான் முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். தொலை பேசி உரையாடல் ஒட்டு கேட்பது கடுமையான குற்றம் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அன்வர் குற்றச்சாட்டையடுத்து முதல்வரின் செயலர், ஏ.டி.ஜி.பி. அஜித்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் பினராயி விஜயனுக்கு கவர்னர் மூலம் அழுத்தம் அதிகரித்து வருகிறது.