7 மாடி கட்டடத்தில் மாசு கட்டுப்பாட்டு கருவி அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு
7 மாடி கட்டடத்தில் மாசு கட்டுப்பாட்டு கருவி அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு
ADDED : செப் 20, 2024 08:43 PM
புதுடில்லி:காற்றில் மாசு அதிகரிப்பதை தடுக்க 7 மாடிகளுக்கு மேல் உயரமான கட்டடங்களில் மாசுக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த டில்லி துணைநிலை கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
டில்லி மற்றும் புறநகரில் குளிர் காலத்தில் காற்று மாசு கடுமையாக அதிகரிக்கும். இந்த ஆண்டு குளிர்காலம் விரைவில் துவங்கவுள்ள நிலையில், டில்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதேபோல, டில்லியில் காற்று மாசு அதிகரிக்க அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தில் பயிர்க் கழிவுகளை எரிப்பதே முக்கியக் காரணம்.
எனவே அண்டை மாநிலங்களிலும் பயிர்க் கழிவுகளை எரிக்காமல் அழிக்க பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், காற்றுத் தர மேலாண்மை ஆணையர், டில்லி மாநகராட்சி முதன்மைச் செயலர், டில்லி அரசின் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர், சுற்றுச் சூழல் துறை முதன்மைச் செயலர், மற்றும் போக்குவரத்துத் துறை சிறப்பு ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் துணைநிலை கவர்னர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, குளிர்காலத்தில் தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரிப்பதை கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது கவர்னர் பேசியதாவது:
குளிர்காலம் துவங்குவதை வரை காத்திருக்க வேண்டாம். மாநகரில் 7 மாடிகளுக்கு மேல் உள்ள உயரமான கட்டிடங்களில் காற்று மாசு கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்த வேண்டும். மேலும், அலுவலக நேரங்களை மாற்றியமைப்பது மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
வாகனங்களால் ஏற்படும் மாசு 39 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாக அதிகரித்து இருப்பது -கான்பூர் ஐ.ஐ.டி., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேங்கிக் கிடக்கும் குப்பையாலும் காற்று மாசு அதிகரிக்கிறது. கழிவுகளை நிர்வகிக்க விரிவான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.