ADDED : ஜூலை 11, 2025 09:23 PM
புதுடில்லி:சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்க, ஆதார் பதிவு நடைமுறையை கடுமையாக்க, டில்லி அரசின் தலைமைச் செயலருக்கு, துணை நிலை கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, துணை நிலை கவர்னர் சக்சேனாவின் முதன்மைச் செயலர் ஆஷிஷ் குந்த்ரா, டில்லி தலைமைச் செயலர் தர்மேந்திராவுக்கு அனுப்பிஉள்ள கடிதம்:
அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக டில்லிக்குள் நுழைந்தவர், இங்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை எளிதாக பெறுவதாக பல புகார்கள் வந்துள்ளன.
தேசிய பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, இதைத் தடுக்க வேண்டும். எனவே, ஆதார் பதிவுக்கான நடைமுறையை கடுமையாக்க வேண்டும். எந்த தவறான ஆவணங்களின் அடிப்படையிலும் ஆதார் எண் வழங்கக் கூடாது.
சில தனிநபர்கள் அரசு நலத்திட்டங்களின் சலுகைகளைப் பெற, ஆதார் அடிப்படையில் பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றையும் பெற்று உள்ளனர் என தெரிய வந்துள்ளது. இது, நம் நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள் -2016ன் கீழ், பதிவு செய்ய அங்கீகாரம் பெற்று உள்ளவர்களின் பொறுப்புகளைக் கடுமையாக்கி புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட முகவரியில் கள ஆய்வு செய்ய வேண்டும். கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகள் மிக அவசியம்.
ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு தொடர்பாக, மாதாந்திர தணிக்கை நடத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் உட்பட மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பதிவு மையங்களின் விபரங்களையும் வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவருக்கு ஆதார் எண் வழங்குவதற்கு முன், தரவுகளைச் சேகரிக்கும் பொறுப்பை சீர்படுத்துவது மிக முக்கியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.