சித்து அரசுக்கு குடியரசு தின விழாவில் கவர்னர் புகழாரம்
சித்து அரசுக்கு குடியரசு தின விழாவில் கவர்னர் புகழாரம்
ADDED : ஜன 27, 2024 12:45 AM

பெங்களூரு : ''அரசியலமைப்பு இந்திய குடிமக்களுக்கு, நியாயம், சுதந்திரம், சமத்துவத்தை வழங்குவதுடன், நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பாற்றி, மக்கள் தன்மானத்துடன் வாழும் நோக்கம் கொண்டுள்ளது,'' என கவர்னர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார்.
இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை ஒட்டி, பெங்களூரின், மானிக்ஷா பரேட் மைதானத்தில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், நேற்று கொடியேற்றினார்.
மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும் ஒதுக்கீடு செய்துள்ள நிதி பற்றியும் பட்டியலிட்ட அவர், நீண்ட உரையாற்றினார். அவர் பேசியதாவது:
அரசியலமைப்பு செயல்படுத்தப்பட்ட, 75வது ஆண்டில் கர்நாடகா மற்றும் இந்தியா அமோகமான முன்னேற்றம் அடைந்துள்ளன. அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வை, நாடு முன்னேற்ற பாதையில் செல்ல வழி காட்டியாக அமைந்துள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை கொண்டுள்ள நாம், அமைதி, சமரசத்தை உருவாக்க வேண்டும். கர்நாடகாவின் அனைத்து தொகுதிகளின் வளர்ச்சிக்காக ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
மாநில அரசு கொடுத்த வாக்குறுதிகளின்படி, திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 'சக்தி' திட்டத்தின் மூலம், பெண்களின் முன்னேற்றத்துக்கு புதிய அடியை, எடுத்து வைத்துள்ளது.
இதுவரை 134.34 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயணம் செய்துள்ளனர். அதே போன்று, 'அன்னபாக்யா, கிரஹ ஜோதி, யுவநிதி' திட்டங்களையும் செயல்படுத்தி, தன் அக்கறையை காண்பித்துள்ளது.
எத்தின ஹொளே நீர்ப்பாசன திட்டத்தின், முதல்கட்ட பணிகள் முடியும் கட்டத்தில் உள்ளது. நடப்பாண்டு சோதனை முறையில், 42 கி.மீ., வரை தண்ணீர் பாய்ச்ச திட்டமிடப்பட்டுள்ளது.
மேகதாது குடிநீர் திட்டத்தை, விரைந்து செயல்படுத்த தேவையான, வனப்பகுதி நிலத்தை கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும். கிருஷ்ணா மேலணை திட்டம் மும்முரமாக நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

