கவர்னர் ரவிக்கு நாளை வரை மட்டுமே அவகாசம்: பொன்முடி பதவியேற்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் "கெடு"
கவர்னர் ரவிக்கு நாளை வரை மட்டுமே அவகாசம்: பொன்முடி பதவியேற்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் "கெடு"
ADDED : மார் 21, 2024 04:14 PM

புதுடில்லி: பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க கவர்வர் ஆர்.என்.ரவிக்கு நாளை வரை உச்சநீதிமன்றம் அவகாசம் விடுத்துள்ளது. கவர்னர் ரவி என்ன செய்து கொண்டிருக்கிறார்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு உயா்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்தார். இவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
பின்னர், பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து அவரை மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின், கவர்னருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ரவி மறுப்பு தெரிவித்து விட்டார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று(மார்ச்21) விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: கவர்னர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?. கவர்னர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று சொல்வது அவருடைய வேலை அல்ல.
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க கவர்னர் மறுப்பது ஏன்?
நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என எப்படி கூறமுடியும். அவர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. கவர்னரின் செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
அரசியல் சாசனத்தை கவர்னர் பின்பற்றவில்லை என்றால் மாநில அரசு என்ன செய்யும். பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து கவர்னர் ரவி நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும். கவர்னர் தரப்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

