ADDED : ஜன 18, 2024 02:21 AM
ஹைதராபாத், தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசையின் சமூக வலைதளமான 'எக்ஸ்' தளத்தை, மர்ம நபர்கள் முடக்கினர்.
தமிழிசை சவுந்தரராஜனின், 'எக்ஸ்' சமூகவலை தள பக்கத்தை 6.55 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். கடந்த 14ம் தேதி மத்திய இணை அமைச்சர் முருகன் வீட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியை அதில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் மர்ம நபர்கள், கவர்னர் தமிழிசையின் எக்ஸ் தள பக்கத்தை முடக்கி உள்ளனர். அவரது முகப்புப் படத்தையும், நீக்கி உள்ளனர்.
முடக்கப்பட்ட பக்கத்தை மீட்கும் முயற்சியில், கவர்னர் மாளிகை தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டனர். எனினும், இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, ஹைதராபாத் போலீசில் தெலுங்கானா கவர்னர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி, 'சைபர் கிரைம்' போலீசார், கவர்னர் தமிழிசையின் சமூக வலைதளத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.