3 சட்டசபை தொகுதிகளில் முறைகேடு விசாரணையை துவக்க அரசு குழு உத்தரவு
3 சட்டசபை தொகுதிகளில் முறைகேடு விசாரணையை துவக்க அரசு குழு உத்தரவு
ADDED : செப் 21, 2024 07:05 AM

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட மூன்று சட்டசபை தொகுதிகளில் பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து, வரும் 27ம் தேதிக்குள், துறை ரீதியான விசாரணையை துவக்கும்படி, மேல்சபையின் அரசு உத்தரவாத குழு, மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
மல்லேஸ்வரம், ராஜராஜேஸ்வரிநகர், காந்திநகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில், 2008 முதல் 2011 வரை, 1,539 கோடி ரூபாய் செலவில் நடந்த பணிகளில் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, மாநகராட்சியின் அன்றைய கமிஷனர் சித்தையா, 2011ல் பி.எம்.டி.எப்., எனும் பெங்களூரு மெட்ரோ பாலிடன் அதிரடிப்படை விசாரணைக்கு பரிந்துரை உத்தரவிட்டார்.
பி.எம்.டி.எப்., விசாரணை நடத்திய நிலையில், பி.எம்.டி.எப்., போலீஸ் நிலைய அலுவலகம் மற்றும் கணினி அறையில், தீ விபத்து ஏற்பட்டு கோப்புகள், கம்ப்யூட்டர்கள் எரிந்து கருகின. முறைகேடுகளை மூடிமறைக்கும் நோக்கில், தீ விபத்தை ஏற்படுத்தி கோப்புகளை எரித்ததாக, சட்டசபையில் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதை தீவிரமாக கருதிய மாநில அரசு, மூன்று தொகுதிகளிலும் நடந்துள்ள பணிகள் குறித்து, விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் கமிட்டி அமைத்தது. கமிட்டியும் 2017ல் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது.
நாகமோகன் தாஸ் கமிட்டி அறிக்கை அளித்து, பல ஆண்டுகளாகியும் பெங்களூரு மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே செப்டம்பர் 27ம் தேதிக்குள் விசாரணையை துவக்கும்படி, மேல்சபையின் அரசு உத்தரவாத குழு, மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
முறைகேடு குற்றச்சாட்டை எதிர்கொண்ட அதிகாரிகள் பட்டியல், தற்போது இவர்கள் வகிக்கும் பதவி, ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்கள் பட்டியலையும் தாக்கல் செய்யும்படி, உத்தரவாத குழு உத்தரவிட்டுள்ளது.
மல்லேஸ்வரம், காந்திநகர், ராஜராஜேஸ்வரி நகர் மண்டலங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து, மாநில அரசிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அரசு அங்கீகரித்து, தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது.
நாகமோகன் தாஸ்
ஓய்வு பெற்ற நீதிபதி