ADDED : ஏப் 11, 2025 04:05 AM

சம்பல்பூர் : ஒடிஷாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் கடும் வெயில் அடிப்பதால், அரசு அலுவலகங்களின் வேலை நேரத்தை மாற்றி கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ஒடிஷாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்துகிறது. இங்கு கடந்த 6ல் அதிகபட்சமாக 40.6 டிகிரி செல்ஷியசும், மறுநாள் 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து இந்த மாவட்டத்தில் அரசு அலுவலகங்களின் பணி நேரத்தை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் வெளியிட்ட உத்தரவு:
அரசு அலுவலகங்கள் தற்போது காலை 10:00 முதல் மாலை 5:00 வரை இயங்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக சல்பல்பூர் மாவட்டத்தில் கடும் வெயில் கொளுத்துகிறது. இதையடுத்து, இனி மாநில அரசு அலுவலகங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள் மற்றும் மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள் உள்ளிட்டவை காலை 7:00 முதல் பிற்பகல் 1:00 மணி வரை உணவு இடைவேளையின்றி இயங்கும்.
நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த உத்தரவு வரும் ஜூன் 15 வரை அமலில் இருக்கும். எனவே, அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த நேரத்தில் பணிக்கு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.