அம்பேத்கர் அருங்காட்சியகத்துக்கு அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் வாபஸ்
அம்பேத்கர் அருங்காட்சியகத்துக்கு அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் வாபஸ்
ADDED : பிப் 22, 2024 11:18 PM

தங்கவயல்: தங்கவயலில் அம்பேத்கர் நினைவு அரங்கம், அருங்காட்சியகம் அமைக்க கர்நாடக அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தை திரும்ப பெறுவதாக, கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா அறிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் அம்பேத்கர் எங்கெங்கு வந்து சென்றாரோ, அங்கெல்லாம் அவரின் நினைவாக நினைவரங்கம், அருங்காட்சியகம் அமைப்பதாக அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., அரசு அறிவித்தது.
தங்கவயலில், தென்னிந்திய புத்த சங்கத்துக்கு, 1956 பிப்ரவரி 23ல் அம்பேத்கர் வந்தார். தங்கவயலின் முக்கிய தலைவர்களையும், தொழிலாளர்களையும் சந்தித்து பேசினார். இதனால், தங்கவயலில் அவரின் நினைவரங்கம், அருங்காட்சியகம் அமைக்க அம்பேத்கர் மக்கள் பேரவையின் சிவராஜன் தலைமையிலும், தலித் ரக் ஷனா வேதிகே, கர்நாடக மாநில ஆதிதிராவிடர் நலச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, தங்கவயல் பெமல் நகர் விளையாட்டு திடல் எதிரில் உள்ள இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியதாக போர்டும் வைத்தனர். இதற்காக, 2 கோடி ரூபாய் ஒதுக்கி அரசு அறிவித்தது. முதல் கட்டமாக 1.55 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையில், அம்பேத்கர் அருங்காட்சியகம் அமைக்க சமூக நலத் துறைக்கு வழங்கப் பட்ட இடத்தை அரசு திரும்ப பெற்றுக் கொள்வதாக நேற்று முன்தினம் கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா அறிவித்துள்ளார்.
இதற்கு, மாற்று இடமும் அறிவிக்கவில்லை. இதனால், தங்கவயலில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.