திருப்பதி செல்லும் நெய் லாரிகளில் ஜி.பி.எஸ்., கருவி
திருப்பதி செல்லும் நெய் லாரிகளில் ஜி.பி.எஸ்., கருவி
ADDED : செப் 23, 2024 05:40 AM

பெங்களூரு: கே.எம்.எப்.,பின் நந்தினி நெய்க்கு, 'டிமாண்ட்' அதிகரித்துள்ளது. திருமலை திருப்பதி கோவிலுக்கு, கூடுதலாக மூன்று டேங்கர் நெய் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி லட்டு பிரசாதத்தில், மாட்டு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது, கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நந்தினி நெய்யை, திருப்பதி கோவில் நிர்வாகம் வாங்குகிறது. இதனால், நந்தினி நெய்க்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக மூன்று டேங்கர் நெய் வினியோகிக்கும்படி, கே.எம்.எப்.,பிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக, கே.எம்.எப்., நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ் அளித்த பேட்டி:
ஏற்கனவே கே.எம்.எப்., மூன்று டேங்கர் நந்தினி நெய், சப்ளை செய்கிறது. ஒரு டேங்கரில் 20,000 கிலோ நெய் இருக்கும். தற்போது கூடுதலாக 60,000 கிலோ நெய் சப்ளை செய்யும்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நந்தினி நெய்க்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால், டேங்கர்களுக்கு ஜி.பி.எஸ்., சாதனம் பொருத்தியுள்ளோம். டேங்கருக்கு, ஜி.பி.எஸ்., ஸ்கேனர் லாக் பொருத்தப்பட்டுள்ளது. இங்கு ஒரு முறை லாக் செய்யப்பட்டால், திருப்பதி கோவிலில் தான் திறக்க வேண்டும்.
வாகனத்தின் லாக்கை திறக்க வேண்டுமானால், பாஸ்வேர்டு கட்டாயம். டேங்கரில் உள்ள கியு.ஆர்., கோடை ஸ்கேன் செய்து, திறக்க வேண்டும். ஜி.பி.எஸ்., சாதனம் பொருத்தியதால், டேங்கர் எங்கு செல்கிறது; எங்கு நிற்கிறது என்பதை கண்டுபிடிக்கலாம். நெய்யில் கலப்படம் நடக்காமல் தடுக்க உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.