இசை ஆல்பம்னா இதுதான்! பெருமை தரும் தேசியகீதம்; 14 ஆயிரம் குழந்தைகள், 100 பிரிட்டன் கலைஞர்கள்
இசை ஆல்பம்னா இதுதான்! பெருமை தரும் தேசியகீதம்; 14 ஆயிரம் குழந்தைகள், 100 பிரிட்டன் கலைஞர்கள்
UPDATED : ஆக 15, 2024 01:36 PM
ADDED : ஆக 15, 2024 01:32 PM

புதுடில்லி : நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் சுதந்திர தினத்திற்கென பல்வேறு விருதுகள் பெற்ற புகழ்பெற்ற இசை கலைஞர்களை இணைத்து தேசிய கீதம் இசை ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. கின்னஸ் ரெக்கார்டுக்கும் முன்னெடுத்து செல்லப்படுகிறது.
ஆண்டுதோறும் வித்தியாசமாக நமது தேசிய கீதமான, 'ஜன கண மன அதிநாயக ஜெயகே...' என்ற பாடல் அனைவரையும் கவரும் விதமாக சாதனை புரியும் விதமாக இசை கலைஞர்களால் உருவாக்கப்படும்.
இந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட இசை ஆல்பத்தில் பிரபல புலாங்குழல் வித்வான் ஹரிபிரசாத் சவுராசியாவின் ஸ்வர லயத்தில் சுண்டி இழுக்கும் இசையுடன் துவங்குகிறது. இசைஅமைப்பாளர் ரிக்கிகெஜ், வட மாநில இசைக்கருவி 'சண்டூர் ' வாசிக்கும் ராகுல்சர்மா, மற்றொரு புல்லாங்குழல் இசை கலைஞரான ராகேஷ் சவுராஷ்யா, 'சரோட் ' என்ற இசைக்கருவியில் வல்லவர்களான அயான்அலி, அமான் அலி இணைந்து இசைக்கின்றனர்.
காதுகளை குளிர்விக்கும் கடம்
இத்தனைக்கும் முத்தாய்ப்பாக 100 பிரிட்டன் இசை கலைஞர்கள் வயலின் இசைத்து மேலும் மெருகூட்டுகின்றனர். தமிழக புகழ்பெற்ற இசையான 'கடம்' , நாதஸ்வரம் இடம்பெற்றுள்ளது.
இசைகலைஞர் கிரிதர் உதுபா தனது கடம் வாசிப்பில் தவ சுப நாமே சாகே,என்ற எட்டு ஸ்வரங்களை லாவகமாக தனது விரலால் தட்டி காதுகளை குளிர்விக்கிறார். நாதஸ்வர கலைஞர்கள் ஷேக் முகம்மது, சுபானி, காலிஷாபி மகபூப், வீணை கலைஞர் ஜெயந்தி குமரேஷ், தங்களின் திறமைகளில் விளாசுகின்றனர்.
மலைவாழ் குழந்தைகளான 14 ஆயிரம் பேர் இந்தியா வரைபடம் போல் இணைந்து தேசிய கொடியின் மூவர்ணத்தில் அணிவகுத்து நிற்கின்றனர். அவர்களும் கோரஷாக குரல் எழுப்புகின்ற போது தேசப்பற்று மிளிர்வதை உணர முடிகிறது.
சல்யூட் போடலாமே !
ஒரு நிமிடம் 28 வினாடி கொண்ட இந்த வீடியோ சுதந்திர தின நாளில் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ஒவ்வாரு இந்தியருக்கும் எனது பணிவான பரிசு , அனைவருக்கும் பகிருங்கள் என்று இசை அமைப்பாளர் வேண்டுகோள் விடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நாமும் ஒரு சபாஷ் அல்ல சல்யூட் போடலாமே !