மாற்றுத்திறனாளி ஓவியர் இடது கையால் வரைந்த பிரமாண்ட ஐயப்பன் படம்
மாற்றுத்திறனாளி ஓவியர் இடது கையால் வரைந்த பிரமாண்ட ஐயப்பன் படம்
ADDED : டிச 04, 2024 01:10 AM

சபரிமலை:சபரிமலையில் மாற்றுத்திறனாளி ஓவியர் மனோஜ்குமார் வரைந்த புலி மீதுள்ள ஐயப்பன் படம் பக்தர்களை கவர்ந்து வருகிறது. அப்படத்தின் முன்பு செல்பி எடுக்க பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்தனாபுரத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். பிறவியிலேயே வலது கை இல்லாமல் மாற்றுத்திறனாளியாக பிறந்த இவர் ஓவியக் கலையில் ஆர்வமிக்கவர். கொட்டாரக்கரையிலுள்ள ரவிவர்மா இன்ஸ்டியூட்டில் ஓவியக்கலையை பயின்றார். வாகனங்களுக்கு நம்பர் பிளேட் எழுதிக் கொடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
சபரிமலை ஐயப்பன் மீது அதிக பக்தி கொண்ட மனோஜ் குமார், இந்தாண்டு சீசன் தொடக்கத்திலேயே சன்னிதானம் வந்து விட்டார். இங்கு வாய்ப்புள்ள இடங்களில் ஐயப்பசுவாமி படங்களை வரைந்து வருகிறார். ஐயப்பன் வரலாற்றை விளக்கும் 25 படங்களை இந்த சீசனில் சபரிமலையில் வரைய வேண்டும் என்ற நோக்கத்துடன் முகாமிட்டுள்ளார்.
சபரிமலையில் அதிகம் பேர் வந்து செல்லும் அன்னதான மண்டப சுவரில் புலி மீது ஐயப்பன் இருக்கும் படத்தை 20 அடி உயரத்தில் பிரமாண்டமாக வரைந்துள்ளார். இப்படம் முன் பக்தர்கள் செல்வி எடுத்து வருகின்றனர்.
படத்தை தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் பார்வையிட்டு அவரை உற்சாகப்படுத்தினார். தன் இடது கையால் மட்டும் இப்படிப்பட்ட ஒரு பிரமாண்ட படத்தை வரைந்ததை தேவசம் போர்டு தலைவர் பாராட்டினார்.
இப்படங்கள் அக்ரிலிக் பெயின்டில் வரையப்படுகிறது. ஐயப்பன் குழந்தையாய் காட்டில் கண்டெடுத்தது முதல் சபரிமலை வந்து அமர்ந்தது வரை உள்ள வரலாற்றை படமாக வரைய இவர் திட்டமிட்டுள்ளார்.