குழந்தையின் கழுத்தை அறுத்து குப்பையில் வீசிய கொடூர பாட்டி
குழந்தையின் கழுத்தை அறுத்து குப்பையில் வீசிய கொடூர பாட்டி
ADDED : பிப் 15, 2025 11:57 PM
போபால்: மத்திய பிரதேசத்தில் பச்சிளம் குழந்தையின் கழுத்தை அறுத்து, குப்பை தொட்டிக்குள் வீசிய பாட்டியையும், தாயையும், போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசத்தின் ராஜ்காரில் உள்ள ஒரு குப்பைத் தொட்டிக்குள் நள்ளிரவு நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு, அப்பகுதி மக்கள் சென்று பார்த்தனர்.
அங்கு, பிறந்து ஒரு நாளேயான பெண் குழந்தை, கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அருகில் உள்ள மருத்துவமனையில் ஆரம்பகட்ட சிகிச்சை அளித்த பின், போபாலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.
ரத்தம் வெளியேறினாலும், உள்ளுறுப்புகள் நன்றாக இருந்ததால், அறுவை சிகிச்சைகள் செய்து, குழந்தையின் உயிரை டாக்டர்கள் காப்பாற்றினர். சில நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
உயிர் பிழைத்தாலும், குழந்தையின் நிலை மோசமாக இருந்ததால், மருத்துவக் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டது. மரணத்தின் எல்லையை பார்த்து திரும்பிய அந்த குழந்தையை பார்க்க, உறவினர் என யாருமே வராததால், டாக்டர்கள், நர்சுகள் பாசம் காட்டியதோடு, 'பிஹு' என பெயரையும் சூட்டினர்.
பிறக்கும்போதே, மரணத்தை வென்ற குழந்தை, நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, ராஜ்கார் மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே, பச்சிளம் குழந்தையின் கழுத்தை அறுத்த குரூர மனம் படைத்தவர் யார் என போலீசார் தேடி வந்தனர்.
குப்பைத் தொட்டி அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரண்டு பெண்கள் இந்த செயலை செய்தது தெரியவந்தது.
விசாரணையில், பிஹுவின் தாயும், பாட்டியும் தான் அந்த பெண்கள் என்பது தெரியவந்தது. இரக்கமற்ற முறையில் குழந்தையின் கழுத்தை அறுத்தது பாட்டி என்றும் தெரிந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குழந்தையின் கழுத்தை எதற்காக அறுத்தனர் என்பது குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

