ADDED : ஜன 21, 2025 07:09 AM
பெங்களூரில் வேலை பார்த்து வந்த ஐ.டி., ஊழியர் அதுல் சுபாஷ், 34. இவரது மனைவி நிகிதா சிங்கானி. தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில், மனைவியின் தொல்லை தாங்காமல் அதுல் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது, தாய் நிகிதாவே மகனை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதுல் சுபாஷின் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு, அதுலின் தாயார் அஞ்சு தேவி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நேற்று, நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
'எனது பேரன் எங்கு இருக்கிறார் என்பதை கூற வேண்டும். அவரை பார்க்க வேண்டும். பேரனின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பேரனை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என, சுபாஷின் தாயார் தரப்பில் வாதிடப்பட்டது.
'நிகிதா சிங்கானி இன்னும் குற்றவாளி என நிரூபணம் ஆகவில்லை. எனவே, பொது வெளியில் கூறுவதை வைத்து தீர்ப்பு வழங்க முடியாது. பிள்ளையின் எதிர்காலத்தை கருதி அம்மாவின் வளர்ப்பில் குழந்தை வளர வேண்டும். எனவே குழந்தை அம்மாவுடனே இருக்கும்' என, உத்தரவிட்ட நீதிபதி, அஞ்சு தேவி மனுவை தள்ளுபடி செய்தார்.
- நமது நிருபர் -

