ADDED : மார் 06, 2024 04:29 AM

ஹாசன் மாவட்டம், பல ஆண்டுகளாக ம.ஜ.த., பாதுகாப்பு கோட்டையாக உள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடா இத்தொகுதி எம்.பி.,யாக இருந்தார். 2014ல் முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மனைவி, ஹாசன் தொகுதியில் சீட் பெற அதிகபட்சம் போராடினார். கடைசி நேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா களமிறக்கப்பட்டார். 2019லும் இவரே போட்டியிட்டு வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக எம்.பி.,யானார்.
இம்முறையுர் பிரஜ்வல் ரேவண்ணாவே, ம.ஜ.த., வேட்பாளராக வாய்ப்புள்ளது. இவரை எதிர்த்து செல்வாக்குமிக்க தலைவரை களமிறக்க, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. முன்னாள் எம்.பி., புட்டசாமி கவுடாவின் பேரன் ஸ்ரேஸ் படேலை களமிறக்க, அக்கட்சி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை முதல்வர் சிவகுமாரும், ஸ்ரேயஸ் படேலும் உறவினர்கள். புட்டசாமி கவுடா, 1999 லோக்சபா தேர்தலில், ம.ஜ.த., வேட்பாளர் தேவகவுடாவை தோற்கடித்தார். 2023 சட்டசபை தேர்தலில், ஹொளேநரசிபுரா தொகுதியில், ரேவண்ணாவுக்கு எதிராக, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஸ்ரேயஸ் படேல், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.
இம்முறை லோக்சபா தேர்தலில், ஹாசன் தொகுதியில் ஸ்ரேயஸ் படேல், காங்கிரஸ் வேட்பாளராக வாய்ப்புள்ளது. தன் பணித்திறனால் ஒக்கலிகர், வீர சைவ லிங்காயத், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகிய அனைத்துப் பிரிவினரும், ஸ்ரேயஸ் படேலை ஆதரிப்பர் என, காங்., நம்புகிறது.
முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளரான, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா, ஸ்ரேயஸ் படேல் பெயரை சிபாரிசு செய்துள்ளார்.
ராஜண்ணாவும், தேவகவுடா குடும்பத்தினரும் அரசியல் ரீதியில் எதிரிகள். குறிப்பாக ரேவண்ணாவும், ராஜண்ணாவும் கடுமையான எதிரிகள். ஹாசன் மாவட்ட அரசியல், இதுவரை தேவகவுடா வம்சத்தினர் கைப்பிடியில் உள்ளது.
இதைத் தட்டிப் பறிக்க காங்., முயற்சிக்கிறது. ஒருவேளை ஸ்ரேயஸ் படேல் வேட்பாளரானால், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கடுமையான போட்டியாளராக இருப்பார். இரண்டு கட்சிகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க தலைவர்களின் பேரன்கள் போட்டியிட்டால், ஹாசன் தொகுதியில் அனல் பறக்கும்.
-நமது நிருபர் -

