ADDED : அக் 19, 2024 10:59 PM

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை பி.எம்., சாலை விரிவாக்கம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தது. ஆயினும் கட்டாந்தரையாகவே காணப்படுகிறது.
ராபர்ட்சன்பேட்டை பி.எம்., சாலையில் காந்தி சிலை முதல் சல்டானா சதுக்கம் வரையில் சாலை அகலப்படுத்தும் பணிகள், ஆறு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்தன. ஆனால், சாலையை விரிவுப்படுத்திய இடத்தில் தார் சாலை போடாமல், கட்டாந்தரையாக விட்டு வைத்துள்ளனர்.
மழைக் காலத்தில் சேறும், சகதியுமாக காணப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் புற்கள் வளர்ந்து புல்வெளி சாலையாக மாறியுள்ளது. போதாக்குறைக்கு, சாலையை அமைக்க வேண்டியவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர்.
இந்த சாலையின் அருகே, தங்கவயல் தாலுகாவின் பொதுப்பணித்துறை அலுவலகமும் உள்ளது. இந்த துறையினர் தான் சாலையை மேம்படுத்த வேண்டும். ஆனால், இந்த அலுவலகத்தினர், இதுவரை கண்டு கொண்டதாக தெரியவில்லை.
இந்த அலுவலகத்தின் முன் பெயர் பலகையே இல்லை. இப்படியொரு அலுவலகம் இருப்பதாகவே பொதுமக்களுக்கு தெரியகூடாதென, பெயர் பலகையை வைக்கவில்லை போலும்.
இதன் அலுவலகம் அருகிலேயே கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் டிப்போ உள்ளது. இங்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதன் நுழைவாயிலில் சாலை சீரழிந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதை பஸ் டிப்போ அதிகாரிகளும், பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் யாருமே கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.
ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலையம் அருகில் உள்ள சாலையையும் அகலப்படுத்தினர். ஆனால் அங்கு சாலையை சீரமைக்காததால் இன்னும் கட்டாந்தரையாகவே உள்ளது. இதன் மீது நகராட்சி நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை. பொதுநலத்தில் அக்கறை உள்ள சமூக ஆர்வலர்களும் கூட கவனம் செலுத்தாமல் இருப்பது விந்தையாக உள்ளது.
எப்போது விமோச்சனம்
இந்த சாலையில் அதிகாரத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் தினமும் நடமாடுகின்றனர். இந்த சாலையை பொறுப்பான அதிகாரிகள் கவனிக் கவே இல்லை. யாரிடம் தான், புகார் செய்ய வேண்டுமோ. 100 கோடி ரூபாய் செலவில் சாலைப் பணிகள் மேம்படுத்திய பட்டியலில் பி.எம்.சாலையும் உள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக விமோச்சனம் பிறக்கவில்லை.
-ஆனந்தன், ஈ.டி. பிளாக், உரிகம்
நிரந்தர டிவைடர்
தங்கவயலின் இதய பகுதியாக உள்ள ராபர்ட்சன்பேட்டை சாலையை சீரமைக்க வேண்டும். சுராஜ்மல் சதுக்கம் முதல் காந்தி சதுக்கம் வரை இரட்டை பாதை அமைத்தால் நகரின் தரம் உயரும். சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியும். ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில் நிரந்தர டிவைடர் அமைக்க வேண்டும்.
-காசிநாதன், உரிகம், தங்கவயல்
பொறுப்பற்ற அதிகாரிகள்
சாலையை எதற்காக அகலப்படுத்தினரோ தெரியவில்லை. விரிவு செய்தபோதே, தார்சாலையாக அமைத்திருக்க வேண்டும். நடைபாதைகளில் டைல்ஸ் பதித்து உள்ளனர். ஆனால், தரமற்ற பணியாக உள்ளது. அதிகாரிகள் பொறுப்பற்று செயல்படுகின்றனர். இதை தட்டிக்கேட்க வேண்டியவர்கள் எதற் காக மவுனமாக இருக்கின்றனரோ?
-தாமோதரன், ராபர்ட்சன்பேட்டை
கரையும் நிதி
பி.எம்., சாலை, விரிவாக்கம் செய்ததை வரவேற்கலாம். ஆனால் பல ஆண்டு களாக தார் சாலை அமைக்காமல், மண் சாலையாகவே இருந்து வருகிறது. சேறு சக்தியாகவே காண முடிகிறது. சாலை விரிவாக்கம் பிரயோஜனமே இல்லை. நகர வளர்ச்சிக்கு வழங்கப் படும் நிதி எல்லாம், எப்படி கரைந்து விடுகிறதோ தெரியலையே.
-பாஸ்கர், சாம்பியன் ரீப்