ஹைட்ரஜன் ரயில் திட்டத்தில் இந்தியா பெரும் சாதனை!உலகின் மிக நீண்ட ரயில் இயக்கி சாதனை
ஹைட்ரஜன் ரயில் திட்டத்தில் இந்தியா பெரும் சாதனை!உலகின் மிக நீண்ட ரயில் இயக்கி சாதனை
UPDATED : ஜூலை 18, 2026 05:54 PM
ADDED : ஜூலை 18, 2026 05:42 PM

- நமது சிறப்பு நிருபர் -
பசுமை ரயில் திட்டத்தின் முன்னோடியாக வடிவமைக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் திட்டத்தில், இந்தியா பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி உள்ளது. பல்வேறு வளர்ந்த நாடுகளும், இரண்டு முதல் மூன்று பெட்டிகள் உடைய ரயிலை மட்டுமே இயக்கும் நேரத்தில், 10 பெட்டிகள் அடங்கிய ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளது.
ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் இடையே இயக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூய்மையான மற்றும் நிலையான ரயில் போக்குவரத்தை நோக்கிய இந்தியாவின் மாற்றத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். அதேசமயம், நிலக்கரி, டீசல் பயன்பாட்டால் அதிகளவு உமிழப்பட்ட கார்பனை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி.
பசுமை ரயில்வே திட்டத்தின் முக்கிய அம்சமான ஹைட்ரஜன் ரயில் சேவை, பல ஆண்டுகளாக இறக்குமதி செய்யப்படும் டீசலை, இந்தியா சார்ந்திருப்பதை கணிசமாக குறைத்துள்ளது. ஹைட்ரஜன் வாயு மிகவும் ஆபத்தானது என்பதால், அதை பாதுகாப்பாக பயன்படுத்தி இயக்குவதற்காக பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு அனுமதியளித்துள்ளது.
ரயிலில் பிரத்யேகமாக, பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்ட பெட்டியில் அதிக அழுத்தம் கொண்ட ஹைட்ரஜன் நிரப்பப்படும். இது, காற்றுடன் வேதிவினை புரியும்போது மின்சாரம் உற்பத்தியாகி ரயில் இயங்குகிறது. டீசல் இஞ்சின்களை போல் இந்த ரயில் கார்பனையோ அல்லது கரும்புகையையோ வெளியிடுவதில்லை. மாறாக, ஹைட்ரஜன் வேதி வினையால் நீராவி மட்டுமே துணைப்பொருளாக வரும்.
இதனால், சுற்றுச்சூழலுக்கு எந்த கேடும் ஏற்படாது. இதனால், ஹைட்ரஜன் ரயில் போக்குவரத்தை ஊக்குவிக்கும் உலக நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவின் வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. எனினும், ஹைட்ரஜன் ஆற்றல் ரயில்கள் உலகளவில் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.
உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்த விவகாரத்தில் இந்தியா ஒருபடி மேலே முன்னேறியுள்ளது. தற்போது உலகளவில் இயங்கும் பெரும்பாலான ஹைட்ரஜன் பயணியர் ரயில்கள், இரண்டு அல்லது மூன்று பெட்டிகளை மட்டுமே கொண்டுள்ளன.
குறுகிய துார வழித்தடங்களில் மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, இந்திய ரயில்வேயின் ஹைட்ரஜன் ரயில், 2,600 பயணியர் செல்லும் வகையில் 10 பெட்டிகளை கொண்டுள்ளது.
உலகின் மிக நீண்ட ஹைட்ரஜன் ரயில்களாக இந்திய ரயில்கள் இருக்கும். எனவே, நம் நாட்டில் உள்ள ஹைட்ரஜன் ரயில், அளவு மற்றும் லட்சியம் ஆகிய இரண்டிலும் குறிப்பிட்ட முன்னேற்றத்தை கொண்டுள்ளது. ஹைட்ரஜன் ரயிலில் பாதுகாப்பு அம்சங்களும் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆபத்தான நேரத்தில் தானியங்கி முறையில் செயல்பாட்டை நிறுத்தும் அமைப்பும் இந்த ரயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் அசாதாரணமான செயல்பாடு கண்டறியப்பட்டால், இந்த அமைப்பு தானாகவே ஹைட்ரஜன் வினியோகத்தை நிறுத்திவிடும். ரயில் ஓட்டுநரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவரது அறை வடிவமைக்கப்பட்டு உள்ளது. அவசர காலங்களில் ரயிலை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல உதவும் சிறப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ரயில் ஓட்டத்தை தாண்டி, மிகப்பெரிய ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றும் ஜிந்த் நகரில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 3,000 கிலோ ஹைட்ரஜனை சேமிக்கலாம். இது, எரிபொருள் சேமிப்பு, வினியோக உட்கட்டமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள், செயல்பாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஹைட்ரஜன் சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த ஆலை வளாகத்தில் கசிவை கண்டறியும் கருவிகள், தீப்பிழம்பை கண்டறியும் கருவிகள், தானியங்கி பணிநிறுத்த அமைப்புகள், தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நீர் தெளிப்பான்கள், தீ எச்சரிக்கை அலாரங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன. ஜிந்த் - சோனிபட் ஹைட்ரஜன் ரயில் சேவை அனுபவத்தை பயன்படுத்தி, கல்கா - சிம்லா உட்பட பல்வேறு பாரம்பரிய ரயில் பாதைகளில், ஹைட்ரஜன் ரயிலை அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயிலின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் மலிவான கட்டணம். பயண தூரத்தை பொறுத்து கட்டணம் 5 ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 25 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இது, ரயில் போக்குவரத்து துறையில், இந்தியாவின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதுடன், 'தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம்' மற்றும் நாட்டின் நீண்டகால 'நிகர பூஜ்ஜிய உமிழ்வு' இலக்கை அடைவதற்கு பங்களிக்கிறது. இந்த ஹைட்ரஜன் ரயில் திட்டம், வெறும் தொழில்நுட்ப செயல் விளக்கம் மட்டுமல்ல; மாறாக, பசுமையான எதிர்காலத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக ரயில்வே எவ்வாறு மாறக்கூடும் என்பதற்கான தொலைநோக்கு பார்வை.
உலகளாவிய நிபுணத்துவத்தை உள்ளூர் புத்தாக்கத்துடன் இணைப்பதன் வாயிலாக, பிற நாடுகள் பின்பற்றுவதற்கான முன்னுதாரணத்தை இந்தியா உருவாக்கி வருகிறது.
