இல்லாத மணப்பெண்ணுடன் திருமணம்; இடைத்தரகரால் ஏமாந்த மாப்பிள்ளை
இல்லாத மணப்பெண்ணுடன் திருமணம்; இடைத்தரகரால் ஏமாந்த மாப்பிள்ளை
ADDED : ஜன 30, 2025 06:25 AM
உனா: ஹிமாச்சலில், திருமணத்துக்கு சென்ற மணமகன் குடும்பத்தார், மணமகள் இல்லாததால் வெறுங்கையுடன் வீடு திரும்பிய சம்பவம் நடந்துள்ளது.
ஹிமாச்சலின் உனா மாவட்டத்தில் உள்ள நாரி என்ற கிராமத்தைச் சேர்ந்த 34 வயது நபருக்கு, இடைத்தரகர் மனு என்பவர் உதவியுடன் திருமணத்துக்கு பெண் பார்த்து நிச்சயிக்கப்பட்டது. அந்த பெண், 20 கி.மீ., தொலைவில் உள்ள சிங்கா கிராமத்தைச் சேர்ந்தவர்.
கடந்த, 27ம் தேதி திருமணம். மணமகன் மற்றும் குடும்பத்தினர் உறவுக்காரர்கள் புடைசூழ, சிங்கா கிராமத்துக்கு கார்களில் வந்திறங்கினர். ஆனால், திருமணம் நடப்பதற்கான எந்த அறிகுறியும் அந்த கிராமத்தில் தென்படவில்லை.
கிராமவாசி ஒருவரிடம், மணமகளின் புகைப்படத்தை காட்டி, முகவரியை விசாரித்தனர். புகைப்படத்தில் உள்ள பெண், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அல்ல என, அவர் கூறியதை கேட்டு, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமணம் அவசரமாக நிச்சயிக்கப்பட்டதால், அந்த பெண்ணை மகமகனும், அவரது குடும்பத்தினரும் இதற்கு முன் நேரில் பார்த்ததில்லை. இந்த திருமணத்துக்காக, இடைத்தரகர் மனு, மணமகன் குடும்பத்தினரிடம், 50,000 ரூபாய் வாங்கி உள்ளார்.
மணமகள் குறித்து அவரிடம் கேட்ட போது, முன்னுக்கு பின் முரணாக அவர் பதிலளித்தார். தப்பிக்க முயற்சித்த மனுவை, அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
தகவலறிந்த போலீசார், அவரிடம் விசாரித்ததில், புகைப்படத்தில் உள்ள பெண், ஆஸ்திரேலியாவில் வசிப்பதாக அவர் கூறி உள்ளார். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மணமகனின் திருமண செலவான, 5.86 லட்சம் ரூபாயை இடைத்தரகர் மனு ஏற்க வேண்டும் என, நாரி பஞ்சாயத்து உத்தரவிட்டது.