கருகும் நிலக்கடலை பயிர்: மழைக்கு ஏங்கும் விவசாயிகள்
கருகும் நிலக்கடலை பயிர்: மழைக்கு ஏங்கும் விவசாயிகள்
ADDED : செப் 22, 2024 11:34 PM

பங்கார்பேட்டை: நல்ல மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்து மழையை நம்பி, நிலக்கடலை விதைத்த விவசாயிகள், மழை பெய்ய தவறியதால், மிகுந்த கவலையில் உள்ளனர்.
பங்கார்பேட்டை தாலுகா பூதிகோட்டை, ஜோதிட ஹள்ளி, ஆலம்பாடி, கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மழையை எதிர்ப்பார்த்து, வயல்களில் நிலக்கடலை விதைத்தனர். கடந்த ஒன்றரை மாதமாக மழை பெய்யாததால், நல்ல விளைச்சலை எதிர்பார்த்த விவசாயிகள், தலையில் கையை வைத்து அமர்ந்துள்ளனர்.
பூச்சிகள் தாக்காமல் இருக்க உரம், பூச்சிகொல்லி மருந்துகளை தெளித்தனர். மழை இல்லாததால் மண்ணில் ஈரப்பதம் குறைந்து நிலக்கடலை, துவரை, பட்டாணி உள்ளிட்ட பிற பயிர்கள் கருகி வருகின்றன.
பங்கார்பேட்டை வேளாண் அலுவலர் விஜயகுமார் கூறியதாவது:
விதைப்பு நேரத்தில் ஒரு குவிண்டால் நிலக்கடலை 6,900 ரூபாயாக இருந்தது. நல்ல லாபத்தை எதிர்பார்த்து நிலக்கடலை விதைகள் வாங்கி விதைத்தோம். களையெடுப்பு உள்ளிட்ட இதர பணிகளுக்கும் அதிக பணம் செலவிடப்பட்டது.
தற்போது மழை இல்லாததால் விளைச்சலுக்கு உத்தரவாதம் இல்லை. மானாவாரி நிலத்தில் தானியங்கள், நிலக்கடலை, கேழ்வரகு, துவரை, பட்டாணி போன்றவற்றை விவசாயிகள் அதிக அளவில் விதைத்துள்ளனர்.
பயிர்கள் அனைத்தும் ஈரப்பதம் இல்லாததால் கருகி வருகின்றன. ஒரு வாரத்தில் மழை பெய்யாவிடில், நிலக்கடலை முற்றிலும் காய்ந்துவிடும்.
இவ்வாறு அவர்கூறினார்.
கண்ணீர் தான்...
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வறட்சி நிலவுகிறது. இம்முறை நல்ல மழை பெய்யும் என எதிர்பார்த்தோம். ஆனால் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் மீண்டும் கண்ணீர் தான் எங்களுக்கு சொந்தம்.
சிவகுமார், விவசாயி, பூதிகோட்டை
முதலுக்கே மோசம்
ஏற்கனவே தேவையான விதைகள், உரங்கள் வாங்கினோம். ஏக்கருக்கு 10,000 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தோம். மழை பெய்யாததால் முதலுக்கே மோசமானது. வறட்சியால் தவிக்கிறோம்.
கோடியப்பா, பலமந்தி கிராமம்
வறட்சி தாலுகா
பங்கார்பேட்டையை வறட்சி தாலுகாவாக அரசு மீண்டும் அறிவிக்க வேண்டும்; விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
மரகல் சீனிவாஸ்,
விவசாயிகள் சங்க தலைவர்