440 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் சுகாதார பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
440 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் சுகாதார பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
ADDED : ஜன 02, 2025 11:36 PM

புதுடில்லி: நாடு முழுதும், 44-0 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில், கடுமையான உடல்நல பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ரசாயனப் பொருட்கள் உள்ளதாக, நிலத்தடி நீர் தரம் குறித்த ஆண்டறிக்கை கூறுகிறது. ராஜஸ்தான், கர்நாடகா, தமிழகத்தில் இந்த நிலை மிகவும் மோசமாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரின் தரம் குறித்த ஆண்டறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
நைட்ரேட்
இதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
நாடு முழுதும் நிலத்தடி நீரின் தரம் குறித்த ஆய்வுகள் கடந்த 2023ம் ஆண்டில் நடத்தப்பட்டன.
பருவமழைக்கு முன், பின் என இரண்டு கட்டங்களாக நாடு முழுதும், 15,259 இடங்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இந்த ஆய்வுகளின்படி, 440 மாவட்டங்களில் பரிசோதிக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில், 20 சதவீதத்துக்கும் அதிகமானவற்றில், பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட, நைட்ரேட் அதிகளவில் இருப்பது தெரியவந்து உள்ளது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய தர ஆணையத்தின் நிர்ணயிக்கப்பட்ட அளவான 1 லிட்டரில், 45 மில்லி கிராம் என்ற அளவைத் தாண்டி, இந்த மாவட்டங்களில் நைட்ரேட் அளவு மிகவும் அதிகமாக இருந்தது.
440 மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில், 20 சதவீதத்துக்கும் அதிகமான அளவு நைட்ரேட் இருந்தன.
ராஜஸ்தான், கர்நாடகா, தமிழகத்தில், 40 சதவீதத்துக்கும் அதிகமான மாதிரிகளில் நைட்ரேட் அதிகளவில் இருந்தன.
மஹாராஷ்டிரா 35, தெலுங்கானா 27, ஆந்திரா 23, மத்திய பிரதேசத்தின் 22 சதவீத மாதிரிகளில் நைட்ரேட் அதிகமாக இருந்தன.
உடல்நல பாதிப்பு
ஒரு லிட்டரில், 45 மில்லி கிராமைவிட அதிகமாக நைட்ரேட் இருந்தால், அது குடிப்பதற்கு உகந்தது அல்ல. இது, பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
விவசாயிகள் நைட்ரேட் உரங்களை பயன்படுத்தும்போது, அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சும்போது, நைட்ரேட் பூமியில் சேருவது, இந்தப் பகுதிகளில், நைட்ரேட் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணங்களாக இருக்கும்.
அதுபோல, கால்நடை கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததும் காரணமாகும்.
வீடுகளில் இருந்து வெளியேறும் திட மற்றும் திரவக் கழிவுகள் பூமியில் மற்றும் நீர்நிலைகளில் கலப்பதும், நிலத்தடி நீரில் நைட்ரேட் அதிகமாவதற்கு காரணங்களாக அமைந்து விடுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.