440 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மாசுபாடு; வெளியானது அதிர்ச்சி தகவல்
440 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மாசுபாடு; வெளியானது அதிர்ச்சி தகவல்
UPDATED : ஜன 02, 2025 11:07 AM
ADDED : ஜன 02, 2025 09:49 AM

புதுடில்லி: நாடு முழுவதும் 440 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது.
2023ம் ஆண்டு நிலவரப்படி, 440 மாவட்டங்களிவ் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு பாதுகாப்பு அளவை விட கூடுதலாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டு 359 மாவட்டங்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 7 ஆண்டுகளில் 80 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்தியாவில் உள்ள 56 சதவீதம் மாவட்டங்களில், ஒரு லிட்டர் தண்ணீரில் 45 மில்லி கிராமுக்கு அதிகமான நைட்ரேட் அமிலம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது குழந்தைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மோசமானது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிகபட்சமாக ராஜஸ்தானில் 49 சதவீதமும், கர்நாடகாவில் 48 சதவீதம் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்தில் 37 சதவீத நிலத்தடி நீரில் பாதுகாப்புக்குரிய அளவை விட, நைட்ரேட் நச்சு கூடுதலாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. விவசாயத்துக்கு பயன்படுத்தக்கூடிய நைட்ரேட் உரம் காரணமாக நிலத்தடிநீரில் நைட்ரேட் அதிகரிக்கிறது.
30.77 சதவீதம் இருந்த நைட்ரேட் பாதிப்பு, பருவமழைக்குப் பிறகு 32.66 சதவீதமாக அதிகரித்ததும் ஆய்வில் பெரியவந்துள்ளது.
நைட்ரேட்டை போன்று ப்ளோரைடு மற்றும் யுரேனியம் ஆகியவையும் நிலத்தடி நீரை அதிகம் பாதிக்கின்றன. ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், 100 ppm (parts per billion) யுரேனியம் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
30 PPBக்கு அதிகமாக யுரேனியம் இருந்தாலே அது பாதுகாப்பற்றது என்கின்றனர் நிபுணர்கள். எனவே, நிலத்தடி நீரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.