UPDATED : மே 17, 2025 12:28 AM
ADDED : மே 16, 2025 11:44 PM

புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், பாக்.,கிற்கு எதிரான துாதரக நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
அந்த வகையில், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் குழுவை பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி, சமீபத்திய மோதல் மற்றும் இந்த விவகாரத்தில், நம் நாட்டின் நிலைப்பாடு குறித்து அந்நாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்கும் ஓர் சர்வதேச தொடர்பு திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 22ம் தேதி துவங்கவுள்ள இந்த வெளிநாடு சுற்றுப்பயண திட்டத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒருங்கிணைக்க உள்ளார்.
ஒவ்வொரு குழுவிலும் ஐந்து முதல் ஆறு எம்.பி.,க்கள் இருப்பர் என்றும், அவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் ஆப்ரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த குழுவுக்கு தலைமை ஏற்கும்படி காங்., - எம்.பி., சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், காங்., தலைமையிடம் இது குறித்து விவாதிக்கும்படியும் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.