ஜார்க்கண்டில் இரட்டிப்பு வேகத்தில் வளர்ச்சி; உறுதி அளித்தார் பிரதமர் மோடி!
ஜார்க்கண்டில் இரட்டிப்பு வேகத்தில் வளர்ச்சி; உறுதி அளித்தார் பிரதமர் மோடி!
ADDED : நவ 04, 2024 01:17 PM

ராஞ்சி: ஜார்க்கண்டில் பா.ஜ., ஆட்சி அமைத்த பிறகு, மாநிலத்தின் வளர்ச்சி இரட்டிப்பு வேகத்தில் இருக்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்வா மாவட்டத்தில், சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்க, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. தடைகள் ஏற்படுத்திய போதும், மத்திய அரசு முயற்சி பல்வேறு முயற்சி மேற்கொண்டு மாநில வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறது. ஜார்க்கண்டில் இரட்டை இன்ஜின் அரசு ஆட்சி அமைக்கும். இங்கு ஆட்சி அமைத்த பிறகு, மாநிலத்தின் வளர்ச்சி இரட்டிப்பு வேகத்தில் நடக்கும்.
16 லட்சம் வீடுகள்
அடுத்த 25 ஆண்டுகள் நாட்டுக்கு முக்கியமானவை, இது ஜார்க்கண்ட் மாநிலத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கான நேரம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி.,பிரிவினருக்கு 16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஜார்க்கண்டில் மோசடிகள் தொழிலாக மாறியுள்ளன, பல இளைஞர்கள் உயிர் இழந்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தனது கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
3 லட்சம் பணியிடங்கள்
ஜார்க்கண்ட் இளைஞர்களின் திறன்களை அதிகரிப்பது, வாய்ப்புகளை வழங்குவது அரசின் பொறுப்பு. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. ஜார்க்கண்டின் வசதி, பாதுகாப்பு, செழிப்பு போன்ற உத்தரவாதத்துடன் பா.ஜ,, களமிறங்கி உள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சேர்ப்பில் முறைகேடு, வினாத்தாள் கசிவு போன்றவை வாடிக்கை ஆகிவிட்டது. பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.