மருத்துவ காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி குறைப்பா? செப்.,9ல் முடிவு தெரியும்
மருத்துவ காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி குறைப்பா? செப்.,9ல் முடிவு தெரியும்
ADDED : செப் 05, 2024 03:12 PM

புதுடில்லி: மருத்துவ காப்பீட்டுக்கான 18 சதவீத ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து வரும் 9 ம் தேதி நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியிருந்தார். வரி ரத்து, குறைப்பு செய்தல் என 4 பரிந்துரைகளை, மத்திய, மாநில அதிகாரிகள் இடம்பெற்றுள்ள பிட்மென்ட் குழு நிதியமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் செப்., 9 ம் தேதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. பிட்மென்ட் குழு அளித்த பரிந்துரை குறித்து பரிசீலனை செய்யப்படலாம் எனக்கூறப்படுகிறது. அதில், வரி ரத்து என்ற கோரிக்கை ஏற்கப்பட்டால், அரசுக்கு ரூ.3,500 கோடி இழப்பு ஏற்படக்கூடும்.
மற்றொரு பரிந்துரையாக, மூத்த குடிமக்கள் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான காப்பீடுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கலாம் எனக்கூறப்பட்டு உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2,100 கோடி இழப்பு ஏற்படும்
மூத்த குடிமக்களுக்கு மட்டும் காப்பீட்டில் வரிவிலக்கு அளிக்கலாம் இதனால் ரூ.650 கோடி மட்டுமே இழப்பு ஏற்படக்கூடும்.
மற்றொரு பரிந்துரையாக, மருத்துவ காப்பீட்டுக்கு 5 சதவீதம் மட்டும் வரி விதிக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது. இதனால், அரசுக்கு ரூ.1700 கோடி இழப்பு ஏற்படும். இதில், எந்த பரிந்துரை ஏற்கப்படும் என்பது குறித்து வரும் 9 ம் தேதி தெரியவரும்.