குதிரை விற்பனைக்கு வரி விதிக்க புஷ்கரில் குவிந்த ஜி.எஸ்.டி., படை
குதிரை விற்பனைக்கு வரி விதிக்க புஷ்கரில் குவிந்த ஜி.எஸ்.டி., படை
ADDED : நவ 06, 2025 03:28 AM

அஜ்மீர்: ராஜஸ்தானில், நேற்றுடன் முடிவடைந்த புஷ்கர் கால்நடை கண்காட்சியில், 40 லட்சம் ரூபாய் வரை குதிரைகள் விற்பனையானதால் வரி விதிப்பதற்காக ஜி.எஸ்.டி., அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில், இந்த ஆண்டுக்கான கால்நடை சந்தை அக்., 29ல் துவங்கி நேற்றுடன் முடிந்தது.
உண்மை இல்லை இதில், 3,000 குதிரைகள் மற்றும் 1,300 ஒட்டகங்கள் உட்பட 4,300-க்கும் மேற்பட்ட விலங்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் கேரி கில் என்பவரின், 'ஷபாஸ்' என்ற குதிரை, 15 கோடி ரூபாய் மதிப்பு உடையது என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அதே போல் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கில் என்பவர் வளர்க்கும், 'அன்மோல்' எனும் ஆண் எருமை, 23 கோடி ரூபாய் என கூறப்பட்டது.
இது குறித்து ராஜஸ்தான் கால்நடை துறை கூடுதல் இயக்குநர் அலோக் கேரே கூறுகையில், “சமூக வலைதள பதிவுகள், பார்வையாளர்களை தவறாக வழிநடத்துகின்றன. அவர்கள் சொல்வதில் உண்மையில்லை.
''புஷ்கர் கண்காட்சியில், 1 கோடி ரூபாய்க்கு கூட எந்த விலங்கும் விற்பனையாகவில்லை. குதிரைகள், 5 லட்சம் ரூபாயில் துவங்கி அதிகபட்சம், 40 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகி உள்ளன,” என்றார்.
அகில இந்திய மார்வாரி குதிரைகள் சங்க தலைவர் கஜேந்திர சிங் கூறுகையில், “இங்கு காட்சிக்காக அழைத்து வரப்படும் சில குதிரைகள், இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை, உரிமையாளர்கள் விற்பதில்லை. இருப்பினும் தாங்கள் வை த்துள்ள குதிரையின் மதிப்பை சொத்தாக பாவித்து, கோடிக்கணக்கான ரூபாய் விலை சொல்கின்றனர்,” என்றார்.
சோதனை குதிரைகள் விற்பனைக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி., அமலில் உள்ளது. மற்ற விலங்குகள் விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதால் அவற்றுக்கு ஜி.எஸ்.டி., இல்லை.
இந்நிலையில், புஷ்கர் சந்தையில் வியாபாரிகள் பல லட்சம் ரூபாய்க்கு குதிரைகளை விற்றதால், அங்கு ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
மாநில கால்நடை துறையிடம் விற்பனையான குதிரைகள் மற்றும் விலை விபரங்களை பெற்று, ஜி.எஸ்.டி., வசூலில் இறங்கினர்.

