இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக ஜிஎஸ்டி சீர்திருத்தம்: பிரதமர் மோடி
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக ஜிஎஸ்டி சீர்திருத்தம்: பிரதமர் மோடி
ADDED : செப் 04, 2025 07:16 PM

புதுடில்லி: '' 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மக்களுக்கு மகிழ்ச்சி
டில்லியில் நடந்த தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: உரிய காலத்தில் மாற்றங்கள் செய்யாமல் தற்போதைய சூழ்நிலையில் நமது நாட்டை சரியான இடத்தில் நிலைநிறுத்த முடியாது. ஆகஸ்ட் 15 ல் செங்கோட்டையில் உரையாற்றும் போது இந்தியாவை தன்னிறைவு பெறுவதற்காக, அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்தேன்.
இந்த தீபாவளி மற்றும் சாத் பண்டிகைக்கு மக்களுக்கு இரட்டிப்பு பரிசு கிடைக்கும் என உறுதியளித்து இருந்தேன்.
தேவையானது
தற்போது ஜிஎஸ்டி இன்னும் எளிதாக மாறி உள்ளது. நவராத்திரியின் முதல்நாளான செப்டம்பர் 22 அன்று அடுத்த தலைமுறையினருக்கான இந்த சீர்திருத்தம் அமல்படுத்தப்படும். இந்த சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு உதவும். அனைத்து பொருட்களின் விலையும் குறையும். அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தம் இது. ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் தேவையானதாக இருந்தது.
முன்னரே விவாதம்
சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தம் ஜிஎஸ்டி. நாட்டின் வளர்ச்சிக்கு இது இரு மடங்கு ஊக்கம் அளித்தது. ஒரு புறம் சாமானிய மக்களிடம் பணம் சேமிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரம் அமல்படுத்தப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, பல ஆண்டு கனவு நனவானது. ஜிஎஸ்டிக்கான விவாதம் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கவில்லை. அதற்கு முன்னரே விவாதம் நடந்தது. ஆனால், அதற்கான பணிகளில் யாரும் ஈடுபடவில்லை
ஜிஎஸ்டி இன்னும் எளிதாகி உள்ளது. தற்போது 5 மற்றும் 18 சதவீதம் என்பது நவராத்திரியின் முதல் நாளன்று அமலாகும். 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து புதிய ரத்தினங்கள், இந்தியாவின் துடிப்பான பொருளாதாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதிருப்தி
ஜிஎஸ்டிக்கு முன்பு காங்கிஸ் ஆட்சியில் ஏராளமான வரிகள் இருந்தன. மருந்துக்கும், காப்பீட்டுக்கும் கூட வரி வசூலிக்கப்பட்டது. குழந்தைகள் சாப்பிடும் மிட்டாய்களுக்கும் வரி விதிக்கப்பட்டதுடன், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் அதிக வரி விதிக்கப்பட்டது. இதனால், ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். நடுத்தர மக்களின் வாழ்க்கையை காங்கிரஸ் அரசு கடினமாக மாற்றியிருந்தது. அதிக வரி வசூலிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தியில் இருந்தனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.