ஜிஎஸ்டி மறு சீரமைப்பு: விலை குறையப்போகும் பொருட்கள்
ஜிஎஸ்டி மறு சீரமைப்பு: விலை குறையப்போகும் பொருட்கள்
UPDATED : செப் 02, 2025 03:21 PM
ADDED : செப் 01, 2025 10:59 PM

புதுடில்லி: பிரதமர் மோடி அறிவித்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பு மூலம் விலை குறைய உள்ள பொருட்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஷாம்பு, பற்பசை முதல் கார்கள் வரை விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்து அறிவித்தார். தற்போதைய 5%, 12%, 18%, 28% என்ற நான்கு வரி அடுக்குகள், 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட உள்ளன. புகையிலை, மது போன்ற பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்படும். இதனால், பொருட்களின் விலை குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வரி சீர்திருத்தம் தொடர்பாக விலை குறைய வாய்ப்பு உள்ள பொருட்கள் என சில பட்டியல் வெளியாகி இருந்தன. இச்சூழ்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 3 மற்றும் 4 ம் தேதி டில்லியில் நடைபெற உள்ளது.
இச்சூழ்நிலையில், தற்போது இந்த வரி சீர்திருத்தம் காரணமாக, ஷாம்பு முதல் மின்னணு சாதன பொருட்கள் வரை விலை குறைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி,
*மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முகப்பூச்சு பவுடர்கள், பற்பசைகள், ஷாம்பு ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
*தீபாவளி முன்னிட்டு பொது மக்கள் அதிகம் வாங்கும் ஏசி, டிவிக்கள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 சதவீதமாக குறையக்கூடும்.
*உரம், விவசாய கருவிகள் மற்றும் டிராக்டர்கள் மீதான ஜிஎஸ்டி தற்போது 12 முதல் 18 சதவீதமாக உள்ளது இதனை 5 சதவீதமாக குறைக்க திட்டம்
*ஜவுளித்துறைக்கும் ஜிஎஸ்டி குறைப்பு செய்ய முடிவு
*சிறிய பெட்ரோல் கார்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும்
*பொது மக்கள் போக்குவரத்துக்கு பெரிதும் நம்பியுள்ள 350 சிசி இன்ஜீன் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் மீதான ஜிஎஸ்டியையும் குறைக்கவும் முடிவு
அதேநேரத்தில்,
*4 மீட்டர் நீளம் கொண்ட கார்களுக்கான ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கவும் திட்டம்
*சூதாட்டம், கேசினோ, குதிரை பந்தயம், பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட குளிர்பானங்கள் மீதான வரியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.