'ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பு மாநிலங்களின் வருவாய் நலன்களை பாதுகாக்க வேண்டும்'
'ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பு மாநிலங்களின் வருவாய் நலன்களை பாதுகாக்க வேண்டும்'
ADDED : ஆக 30, 2025 05:58 AM

''ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பு நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதே. இவை மாநிலங்களின் வருவாய் நலன்களை பாதுகாப்பதாக அமைய வேண்டும். இவற்றின் பலன்கள், மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும்,'' என, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
நாட்டின், 79வது சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, 'தீபாவளி பரிசு காத்திருக்கிறது. ஜி.எஸ்.டி., வரி குறையப் போகிறது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும்' என்றார்.
இதையடுத்து, புதிய வரி விகிதங்கள் தொடர்பான பரிந்துரைகளை தயார் செய்யும் பணி துவங்கியது. தற்போது, ஜி.எஸ்.டி., வரி நான்கு அடுக்குகளில் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதை இரண்டு அடுக்குகளாக, அதாவது, 5 மற்றும் 18 சதவீதம் என நிர்ணயிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
இது, தற்போதுள்ள வரி விதிப்புகளை எளிதாக்கும் என மத்திய அரசு கூறினாலும், தங்களுக்கு கிடைக்கிற வரி வருவாயை, இந்த புதிய வரி விதிப்பு கடுமையாக பாதிக்கும் என, மாநிலங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஜார்க்கண்ட், பஞ்சாப், ஹிமாச்சல், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநில அரசுகள் ஓரணியில் செயல்பட முடிவு செய்துள்ளன. இந்த மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நேற்று டில்லியில் உள்ள கர்நாடக பவனில் நடந்தது. இதில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
சீரமைப்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அதே சமயம், மாநிலங்களுக்கு கிடைக்கும் இழப்பீட்டு மேல் வரி வருவாய் என்பது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழகம் உட்பட பல மாநிலங்கள் பெரும் உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இதற்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில், இந்த புதிய வரி சீரமைப்பு நடவடிக்கைகள் இருந்து விடக்கூடாது. ஜி.எஸ்.டி., வரி என்பது தமிழகத்தின் மிக முக்கிய வருவாய். இது எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது; குறையவும் கூடாது.
தமிழகம் போன்ற மாநிலங்கள், சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம், முழு மனிதவள சக்தியை அடைவதற்கான வழியைக் காட்டுகின்றன. எனவே, வரி சீரமைப்பு முயற்சிகள், ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயை பாதுகாக்கும் விதமாக அமைந்திட வேண்டும்.
சீரமைப்பு நடவடிக்கைகள் அனைத்தும், மாநிலங்களின் வருவாய் நலன்களை பாதுகாப்பதாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது டில்லி நிருபர் -