ஜி.டி.தேவகவுடா கூறியது சரிதான்! சதீஷ் ஜார்கிஹோளி வக்காலத்து
ஜி.டி.தேவகவுடா கூறியது சரிதான்! சதீஷ் ஜார்கிஹோளி வக்காலத்து
ADDED : அக் 04, 2024 12:12 AM

''எப்.ஐ.ஆர்., பதிவானவுடன், யாரும் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா கூறியது சரிதான். இதையே அனைவரும் பின்பற்ற வேண்டும்,'' என பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எப்.ஐ.ஆர்., பதிவானவுடன், ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், மத்திய அமைச்சரவையில் இருக்கும் 25 பேர் ராஜினாமா செய்ய வேண்டும். மாநிலங்களில் அமைச்சராக பதவி வகிக்கும், 300க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.
இவர்கள் மீது வழக்குகள் உள்ளன. அவர்கள் பதவியில் நீடிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், முதல்வர் சித்தராமையாவிடம், ராஜினாமா கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
சிறப்பு அர்த்தம்
ஜி.டி.தேவகவுடா கூறியிருப்பது, உண்மையான வார்த்தைகள். பா.ஜ., - ம.ஜ.த.,வில் உள்ள பலரின் கருத்து இதுதான். ஜி.டி.தேவகவுடா தனக்கு பிரச்னை ஏற்படும் என்பதால், இதுபோன்று பேசியதாக கருத வேண்டியது இல்லை. அவர் பேசியதற்கு சிறப்பு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள, எதிர்க்கட்சி தலைவர் அசோக், முதலில் ராஜினாமா செய்யட்டும். அதன்பின் முதல்வர் சித்தராமையாவிடம், ராஜினாமா கேட்கட்டும்.
பெங்களூரில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மக்கள் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினோம். இதில் தனிப்பட்ட விஷயங்கள் இல்லை. அனைவரும் ஒன்று சேர்ந்தோம். உணவருந்தினோம், ஆலோசனை நடத்தினோம். காங்கிரசில் பிளான் பி என, எதுவும் இல்லை. பிளான் ஏ மட்டுமே.
பணிகள் ஆய்வு
நான் அவ்வப்போது டில்லிக்கு வருவது குறித்து, சிலர் விமர்சிக்கின்றனர். என் மகள் பிரியங்கா எம்.பி.,யாக இருக்கிறார். அரசியலில் அவர் அதிகம் வளர வேண்டும். அவருக்கு வழிகாட்ட, நான் டில்லிக்கு வருகிறேன்.
இங்குள்ள சூழ்நிலைக்கு அவரை பழக்கப்படுத்துகிறேன். அதுமட்டுமின்றி, கர்நாடக பவனில் நடக்கும் பணிகளையும், ஆய்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் மேலிட தலைவர்கள், ஹரியானா சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்களை சந்திக்க வாய்ப்பிருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -