லண்டன் கிளம்பிய விமானம் விழுந்து வெடித்தது : 241 பேர் பலி
லண்டன் கிளம்பிய விமானம் விழுந்து வெடித்தது : 241 பேர் பலி
UPDATED : ஜூன் 13, 2025 02:50 PM
ADDED : ஜூன் 12, 2025 11:52 PM

ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விமானம், சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து வெடித்தது. 600 - 800 அடி உயரமே பறந்த விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானதில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐந்து மாணவர்களும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது, நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர், இரண்டு விமானிகள், 10 விமான பணியாளர்கள் என, மொத்தம் 242 பேருடன், ஏர் இந்தியாவுக்கு சொந்தமான, 'போயிங்' 787' ரக 'ட்ரீம் லைனர்' இரட்டை இன்ஜின் விமானம், நேற்று மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது.
இதில், இந்தியாவைச் சேர்ந்த 169 பேர்; பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர்; போர்ச்சுக்கலைச் சேர்ந்த ஏழு பேர்; கனடாவைச் சேர்ந்த ஒருவர் என, 230 பேர் உட்பட 242 பேர் பயணித்தனர். ஓடுபாதை - 23ல் இருந்து புறப்பட்ட விமானம், 600 - 800 அடி உயரம் மட்டுமே பறந்த நிலையில், சில நிமிடங்களிலேயே பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த கோர விபத்தால், அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேகனி நகரில் உள்ள பி.ஜே.மருத்துவக் கல்லுாரி விடுதி மீது, விமானத்தின் முன்பகுதி மோதியது. அப்போது, விடுதியில் உள்ள உணவு அருந்தும் இடத்தில், 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த விபத்தில், '11 ஏ' இருக்கையில் இருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஷ்வாஸ் குமார் தவிர, விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். பா.ஜ., மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான விஜய் ரூபானியும், 68, உயிரிழந்தவர்களில் ஒருவர்.
மருத்துவக் கல்லுாரி விடுதியில், ஐந்து மாணவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
ஆங்காங்கே உடல் கருகி சிதறிக் கிடந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விமானத்தின் உடைந்த பாகங்களையும் மீட்டனர். விபத்தை தொடர்ந்து, ஆமதாபாத் விமான நிலையத்தின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சில மணி நேரங்களுக்கு பின், மீண்டும் வழக்கம்போல் செயல்பட துவங்கியது.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணியில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கருப்பு பெட்டி என்பது, விமானத்திற்குள் தகவல் சேமிக்க பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவி. விமானம் விபத்திற்குள்ளாகும் போது, அது தொடர்பான காரணங்களை அறிவதற்கு இக்கருவி பெரிதும் உதவுகிறது.
இதற்கிடையே, விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே, 'மே டே' எனப்படும் அவசர உதவி அழைப்பை விமானியர் மேற்கொண்டதாகவும், ஆமதாபாத் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது, சிக்னல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
பறவை மோதியதால் விபத்தா?